பிரபல கார் மாடலை கை கழுவும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்.. மனசை இரும்பாக்கி கொண்டு முடிவெடுத்திருக்காங்க!
முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் முன்னணி கார் மாடல் ஒன்றின் உற்பத்தியைக் கை விட இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கின்றது. உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஜிஎம் (General Motors) பிராண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடில்லாக் எக்ஸ்டி4 எஸ்யூவி (Cadillac XT4 SUV) ரக காரின் உற்பத்தியையே கை விட இருக்கின்றது. வருகின்ற ஜனவரியில் இருந்தே இந்த கார் தயாரிப்பிற்கு முற்று புள்ளி வைக்க திட்டமிட்டு உள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.
இந்த கார் தயாரிப்பை விட்டுவிட்டு அதற்கு பதிலாக அதன் மின்சார வெர்ஷனையே அவர்கள் தயாரிக்க இருக்கின்றனர். இதற்காக அந்நிறுவனம் 390 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கின்றது. இந்த முதலீட்டைக் கொண்டு நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி ஆலைகளான ஃபேர்ஃபாக்ஸ் மற்றும் கண்சஸ் ஆகியவற்றை அது மேம்படுத்த இருக்கின்றது.

புதிய தலைமுறை செவ்ரோலட் போல்ட் இவி-க்களை தயாரிக்கும் வகையிலேயே இந்த மேம்பாடு மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அதேவேளையில், இந்த நிறுவனம் கடில்லாக் எக்ஸ்டி4 எஸ்யூவி காரின் உற்பத்தியை மட்டுமல்ல செவ்ரோலட் மலிபு காரின் உற்பத்தியையும் நிறுத்த இருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகள் இந்த மாதத்துடன் நிறுத்தப்பட இருக்கின்றன.
இதில் சோகம் என்னவென்றால் இந்த கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வராமலேயே இறுதி கட்டத்திற்கு எட்டி இருக்கின்றன என்பதுதான். மேலும், முன்னதாக இந்த நிறுவனம் செவ்ரோலட் போல்ட் மின்சார வாகனங்களையும், எக்ஸ்டி4 மின்சார வாகனங்களையும் ஒரே உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.
ஆனால், இப்போது இந்த பிளானில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. போல்ட் மின்சார வாகனங்களே முதலில் தயாரிக்கப்பட உள்ளன. தற்போது எக்ஸ்டி4 காருக்கான விற்பனை வரவேற்புக் குறைந்து வருவதன் விளைவாகவே இந்த முடிவை ஜிஎம் நிறுவனம் எடுத்திருக்கின்றது. இந்த ஆண்டு சுமார் 12 சதவீதம் வரை இந்த காரின் விற்பனைக்குக் குறைந்திருக்கின்றது.
எனவேதான் மனதை இரும்பாக்கிக் கொண்டு இந்த காரை வெளியேற்றும் முடிவை அது எடுத்திருக்கின்றது. இந்த நிறுவனம் காரை வெளியேற்றுவதோடு தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை, அதன் ஊழியர்களையும் பணியில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. சுமார் 1,695 ஊழியர்களை அது வெளியேற்றி இருக்கின்றது.
உலக அளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஜிஎம் நிறுவனம் அதன் முன்னணி கார்களை மின்சார காராக மாற்றும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அதாவது, எரிபொருள் எஞ்சினைக் கொண்ட தேர்வுகளுக்கு கிடைக்காத வரவேற்பு மின்சார வெர்ஷனாக மாற்றும்போது கிடைக்கும் என ஜிஎம் நம்புகின்றது.
இதன் அடிப்படையிலேயே முன்னணி கார் மாடல்களை மின்சார காராக மாற்றும் பணியில் அது களமிறங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி பிராண்டுகள் ஒட்டுமொத்தமாக எரிபொருளில் இயங்கும் எஞ்சினைக் கொண்ட வாகனங்களின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு மின்சார வாகன உற்பத்தியை முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்க திட்டமிட்டு இருக்கின்றது. பெருவாரியான நிறுவனங்கள் 2030 ஆம் ஆண்டுடனேயே ஐசிஇ வாகனங்களின் உற்பத்தியை கைவிட திட்டமிட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎம் நிறுவனம் அதன் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. அதேவேளையில், நம் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், ஜிஎம் இந்தியாவிலும் அதன் மின்சார வாகன தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெஸ்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சில ஏற்கனவே இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








