போற போக்க பாத்தா ஐசிஇ கார்களுக்கே இந்த இ-கார்கள் டஃப் கொடுக்கும் போலையே! சரவெடி வெடிக்கிறாங்கப்பா எல்லாரும்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதன் விளைவாக, வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவை முக்கியச் சந்தையாகக் கருத்தில் கொண்டு புதுமுக எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் தற்போது பரந்து விரிந்த அளவில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த ஆண்டின் முதல் பாதியிலும் பல புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் டாடா பஞ்ச் இவி-யும் ஒன்றாகும். பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - சிஎன்ஜி ஆகிய வெர்ஷன்களிலும் இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த காரை நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே டாடா நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனைக்கு ஆறே மாதங்களில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை அக்கார் கவர்ந்தது. இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் பஞ்ச் இவி விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
25 kWh பேட்டரி பேக் மற்றும் 35 kWh பேட்டரி ஆகியவையே அவை ஆகும். இதில், முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 300 கிமீட்டரையும், இரண்டாவது 400 கிமீட்டர் ரேஞ்ஜையும் வழங்கும். டாடா பஞ்ச் இவி மலிவு பாதுகாப்பு தருவதிலும் கை தேர்ந்த கார் மாடலாக இருக்கின்றது.
ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பான கார் மாடலே பஞ்ச் இவி. இது இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் தொடங்கி ரூ. 15.48 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி (Mahindra XUV400 EV Facelift): இந்தியாவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே மஹிந்திரா நிறுவனம் பஞ்ச் இவி அறிமுகம் செய்யப்பட்ட அதே ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது.
எக்ஸ்யூவி400 ப்ரோ ரேஞ்ஜ் ஆக அதனை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதற்கு அறிமுகமாக ரூ. 15.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஈசி ப்ரோ (EC PRO) மற்றும் ஈஎல் ப்ரோ (EL PRO) ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இதில் இஎசி ப்ரோவில் ஒற்றை பேட்டரி பேக் தேர்வும், இஎல் ப்ரோவில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஈசி ப்ரோவை 34.5 kWh பேட்டி பேக்கில் மட்டுமே வாங்க முடியும். அதுவே இஎல் ப்ரோவை 34.5 kWh மற்றும் 39.4 kWH ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
இவை ஓர் முழு சார்ஜில் 375 கிமீ தொடங்கி 456 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடலே இதுவாகும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், இஎஸ்பி, டிபிஎம்எஸ், ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிஒய்டி சீல் (BYD Seal): சீன நிறுவனமான பிஒய்டி-யின் இந்தியாவிற்கான மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இந்தியாவில் இ6 மற்றும் அட்டோ 3 ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களைத் தொடர்ந்து சீல்-லையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரே நாளில் 200 யூனிட்டுகள் சீல் எலெக்ட்ரிக் கார் மாடல் டெலிவரி கொடுக்கப்பட்டு நிகழ்வுகள் எல்லாம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே 53 லட்சம் ஆகும். ஆன் ரோடில் இதன் விலை ரூ. 60 லட்சத்தைத் தொடலாம். பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும்.
மூன்று தேர்வுகளும் வெவ்வேறு ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளியேற்றக் கூடியவை. டைனமிக் தேர்வில் 204 பிஎஸ், 310 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டாரும், ஓர் முழு சார்ஜில் 510 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 61.4 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
பிரீமியம் தேர்வு ஓர் முழு சார்ஜில் 650 கிலோமீட்டர் ரேஞ்ஜை தரும். இதற்காக 82.5 kWh பேட்டரி பேக் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், 313 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த தேர்வில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பெர்ஃபார்மன்ஸ் தேர்வில் 82.5 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது 580கிமீட்டர் வரை ரேஞ்ஜ் தரும். மின்சார மோட்டாரை பொருத்த வரை 530பிஎஸ் மற்றும் 670என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்தகைய எலெக்ட்ரிக் காரையே இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பிஒய்டி நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்க்ட்டிக் ப்ளூ (Arctic Blue), அரோரா ஒயிட் (Aurora White) அட்லண்டீஸ் கிரே (Atlantis Gray) மற்றும் காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) ஆகிய நிற தேர்வுகளே சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolls Royce Spectre): இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வந்த மிக மிக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். ரூ. 7.5 கோடி என்கிற விலையிலேயே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இந்த காரும் இந்தியாவில் நடப்பாண்டின் தொடக்க மாதமான ஜனவரியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சென்னையைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் வாங்கிவிட்டார். ஸ்பெக்ட்ரே எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 593 பிஎஸ் பவரையும், 900 என்எம் டார்க் ஆற்றலையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த மின்சார மோட்டார் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதுமட்டுமில்லைங்க, ஓர் முழு சார்ஜில் 520 கிமீ தூரம் வரை இந்த காரில் பயணிக்க முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளையும், குறிப்பாக, சொகுசு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் மட்டுமில்லைங்க, 1.2கோடி ரூபாய் விலைக் கொண்ட பிஎம்டபிள்யூ ஐ5 எம்60 எக்ஸ்டிரைவ் மற்றும் 1.65கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே மசான் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிலவிக் கொண்டிருக்கும் மிக சிறப்பான டிமாண்ட் காரணமாகவே விலை குறைந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடங்கி விலை உயர்ந்த வாகனங்கள் வரை தொடர்ச்சியாக விற்பனைக்கு வந்துக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








