ஆபத்து இல்லாம பாதுகாப்பா டிராவல் பண்ணனும்னு நினைக்கிறவங்க இந்த கார்கள்ல ஒன்றை வாங்கலாம்!
இந்தியாவிற்கான கார் மாடல்களை இந்தியாவிலேயே வைத்து மோதல் ஆய்விற்கு உட்படுத்தும் விதமாக பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Program) தொடங்கப்பட்டது. இந்த கார் கார் மதிப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 4 கார் மாடல்கள் வரை மோதல் சோதனைக்கு உ்ட்படுத்தி அவற்றின் பாதுகாப்பு திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன. நான்குமே டாடா மோட்டார்ஸின் தயாரிப்பு (கார் மாடல்)கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுதவிர அந்த நான்கு கார் மாடல்களுமே ஐந்திற்கு 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்று உள்ளன.
இத்தகைய அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற அந்த கார் மாடல்கள் எவை? மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அவை என்ன மாதிரியான மதிப்பெண் புள்ளிகளை பெற்று இருக்கின்றன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடாவின் முக்கிய தயாரிப்புகளான ஹாரியர் எஸ்யூவி, சஃபாரி எஸ்யூவி, நெக்ஸான் இவி எஸ்யூவி மற்றும் பஞ்ச் இவி எஸ்யூவி ஆகியவை பாரத் என்சிஏபி-ஆல் இதுவரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கார் மாடல்களின் மதிப்பீடுகள் பற்றிய விபரங்களை விரிவாக பார்க்கலாம், வாங்க.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி: டாடாவின் இந்த இரண்டு தயாரிப்புகளும் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. இவையே பாரத் என்சிஏபி-யால் முதன் முதலில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட கார் மாடல்கள் ஆகும். இந்த இரண்டும் பாதுகாப்பு விஷயத்தில் ஒரே மாதிரியான மதிப்பெண்ணையே பெற்றிருக்கின்றன.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார்கள் 32 புள்ளிகளுக்கு 30.08 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 44.54 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, 18 மாதம் முதல் 3 வயது வரையிலான சிறிய குழந்தைகளுக்கும் பாதுகாப்பான கார் மாடல் இது என்பது தெரிய வந்திருக்கின்றது.
இத்தகைய அதிக புள்ளிகளை இந்த கார் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே அதற்கு அதிகபட்ச ரேட்டிங்கான ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர்பேக்குகள், இபிடி (EBD) உடன் கூடிய ஏபிஎஸ் (ABS) ,எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார்கள் தங்களுக்கு தாங்கி இருக்கின்றன. இந்தியாவில் ஹாரியர் எஸ்யூவி தற்போது ரூ. 15.49 லட்சம் முதல் ரூ. 26.44 லட்சம் வரையிலும், சஃபாரி ரூ. 16.19 லட்சம் தொடங்கி ரூ. 27.34 லட்சம் வரையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டாடா நெக்ஸான்: டாடாவின் சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்களைத் தொடர்ந்து பாரத் என்சிஏபி நெக்ஸான்.இவி-யை சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இதில் நெக்ஸான்.இவி-யும் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 29.86 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு 49 புள்ளிகளுக்கு 44.95 புள்ளிகளையும் இந்த கார் பெற்றிருக்கின்றது.
இதுதவிர, காரின் முன் பக்கத்தின் உறுதித் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16 புள்ளிகளுக்கு 14.26 புள்ளிகளையும், பக்கவாட்டின் உறுதித் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16க்கு 15.60 புள்ளிகளையும் நெக்ஸான்.இவி பெற்றிருக்கின்றது. இதுபோன்று அனைத்திலும் மிக மிக சிறப்பான பாதுகாப்பு புள்ளிகளையே பெற்று டாடாவிற்கு மேலும் பெருமிதம் சேர்த்திருக்கின்றது.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடல் இத்தகைய பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பது அந்த கார் உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் டாடா நெக்ஸான் இவி ரூ. 14.49 லட்சம் தொடங்கி ரூ. 19.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக 6 ஏர் பேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பாதசாரிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் அம்சம் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டாடா பஞ்ச் இவி: இந்தியாவில் சற்று விலை குறைவாக விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக பஞ்ச் இவி இருக்கின்றது. விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும், இதனை அதிக பாதுகாப்பானதாக டாடா தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்டு சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிளைண்ட் ஸ்பாட் வியூ மிர்ரர், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், எஸ்ஓஎஸ் (SOS) உள்ளிட்ட வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்ற பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் மோதல் ஆய்வில் 5க்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்திருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 31.46 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் பஞ்ச் இவி பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பாதுகாப்பை தரும் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையிலேயே லேட்டஸ்ட்டாக இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியலில் பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகியவை இணைந்தன. இவற்றிற்கு வரும் நாட்களில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








