அண்ணன் தம்பி போல சிறப்பம்சங்களை பகிர்ந்து கொண்ட ஸ்விஃப்ட்-டிசையர்.. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும் போலையே!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார் பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக புதிய டிசையர் (Dzire) கார் மாடல் இருக்கின்றது. புதிய தலைமுறை (New Gen) வாகனமாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கும் டிசையரையே மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனால்தான் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய டிசையர் கார் மாடலின் அறிமுக நாள் பற்றிய விபரங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதன்படி, வருகின்ற நவம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று அந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. அறிமுக தேதி வெளியாகி இருந்தாலும், கார்குறித்த முக்கிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாமலேயே இருக்கின்றது. அதேவேளையில் சில முக்கியமான விபரங்கள் புதிய டிசையர் பற்றி வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக, புதிய டிசையர் கார் மாடலானது புதிய ஸ்விஃப்ட் காரிடம் இருந்து ஒரு சில அம்சங்களைப் பகிர்ந்துக் கொள்ள இருப்பதாக அந்த விபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு, இரண்டு கார்களும் பரிமாறிக் கொள்ள இருக்கும் அந்த அம்சங்கள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
புதிய டிசையர் செடான் கார், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலிடம் இருந்து பல்வேறு அம்சங்களை பெற இருக்கின்றது. இருப்பினும், மிக முக்கியமானதாக மூன்று அம்சங்கள் பார்க்கப்படுகின்றன. அந்த மூன்று அம்சங்கள் எவை என்பது பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய இசட் சீரிஸ் எஞ்சின்: புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் கார் மாடலில் மாருதி சுஸுகி நிறுவனம் புத்தம் புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட் சீரிஸ் வகை எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎஸ் பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
இந்த பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இதே எஞ்சினே, அதே திறன் வெளிப்பாடுடன் புதிய டிசையரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து, சிஎன்ஜி ஆப்ஷனும் இதில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சிஎன்ஜி வெர்ஷனிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும், ஆனால், சற்று அது திறன் வெளிப்பாடில் பின் தங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது, 69 பிஎஸ் மற்றும் 102 என்எம் டார்க்கை மட்டுமே அது வெளியேற்றும் என தெரிகின்றது. அதேவேளையில், மைலேஜை சிஎன்ஜி மோடில் இந்த கார் வாரி வழங்கும் என கூறப்படுகின்றது.
பெட்ரோலில் இயங்கும்போது 25 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜை அது வழங்கும். ஆனால், சிஎன்ஜி மோடில் ஒரு கிலோவிற்கே அது 32.85 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இத்தகைய சூப்பரான மோட்டாரையே புதிய டிசையர், புதிய ஸ்விஃப்ட் காரிடம் இருந்து பகிர்ந்துக் கொள்ள இருக்கின்றது.
கார் உள்பக்க அலங்கரிப்பு: புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் உட்பக்கத்தை மிகுந்த அழகானதாக மாருதி சுஸுகி அலங்கரித்திருக்கின்றது. குறிப்பாக, டேஷ்போர்டை அது வேற லெவலுக்கு அப்டேட் செய்திருக்கின்றது. முழுக்க கருப்பு நிறத்தைக் கொடுத்து, அத்தோடு, ஆங்காங்கே சில்வர் நிற அக்செண்டுகளையும் அது வழங்கி இருக்கின்றது.
இதனால், ஸ்விஃப்ட் காரின் லுக் கூடுதல் பிரீமியம் தரத்திற்கு உயர்ந்திருக்கின்றது. இதே வேலைப்பாடுகளையே 2024 டிசையர் கார் மாடலும் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டூயல் டோன் நிறத்தால் டிசையரின் கேபின் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர, இன்னும் பல சிறப்புகளையும் அது தாங்கியிருக்கும் என தெரிகின்றது.
தொடர்ந்து, புதிய ஸ்விஃப்ட் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே இந்த காரிலும் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளையும் புதிய டிசையர் தாங்கி இருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து, இந்த காரில் வயர்லெஸ் செல்போன் சார்ஜரையும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
பாதுகாப்பு அம்சங்கள்: புதிய ஸ்விஃப்ட் மாடலிடம் இருந்து எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மட்டுமல்ல அது சில பாதுகாப்பு அம்சங்களையும் பகிர்ந்துக் கொள்ள இருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களே புதிய டிசையர் கார் மாடலிலும் இடம் பெற்றிருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு நிலவியதைப் போலவே புதிய டிசையர் கார் மாடலுக்கு எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் அறிமுகம் அடுத்த மாதமே அரங்கேற இருக்கின்றது. அப்போதே அதன் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








