இது அம்பாசடர் கார் இல்ல.. அதோட கசின் அவிகோ.. எத்தன பேரு இந்த காரை ரோட்டுல பாத்திருக்கீங்க! இதோ வீடியோ!..
நம்மில் பலர் ஹிந்துஸ்தான் அம்பாசடர் (Hindustan Ambassador) காரை பார்த்திருப்போம். இந்த காரே ஒரு காலத்தில் மிகப் பெரும் புள்ளிகளின் பிரதான வாகனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பெருந்தலைவர் காமராசர் தொடங்கி இன்னும் பல தலைவர்கள் இந்த காரையே தங்களின் அதிகாரப்பூர்வமாக வாகனமாக பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய கார் மாடலின் பக்கம் கூடுதலாக இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே அவிகோ (Hindustan Avigo) ஆகும். இது ஓர் அரிய வகை கார் மாடல் ஆகும். குறைந்த காலம் மட்டுமே இந்த காரை ஹிந்துஸ்தான் இந்தியாவில் உற்பத்தி செய்தது. வழக்கமான அம்பாசடர் காரிடம் இருந்து லேசாக மாறுபட்டு இது காட்சியளிக்கும்.

ஹிந்துஸ்தான் நிறுவனம் 2003 ஆம் ஆண்டிலேயே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரை இப்போது சாலையில் பார்ப்பது மிகவும் அரிது. ஒரு சில அவிகோ-வே சாலையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இப்போதும் புத்தம் புதிதுபோல் சாலையில் வலம் வந்துக் கொண்டிருக்கும் அவிகோவின் வீடியோவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.
அந்த அவிகோ கேரளா பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகள் மிகவும் குறைவான காலகட்டம் வரையே மேற்கொள்ளப்பட்டதாலேயே அது ஓர் அரிய கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. அவ்வாறு இந்த காரின் அரிய தன்மையை உணர்ந்தே அதன் உரிமையாளர் இப்போதும் அதனை புதிதுபோல் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த காரில் உள்ள பான்னெட், முன் பக்க கிரில், ஹெட்லேம்ப் ஆகியவை லேசாக வித்தியாசமாக தென்படுகின்றது. வட்ட வடிவ ஹெட்லேம்ப் லேசாக மேல்நோக்கி சாய்க்கப்பட்ட நிலையிலும், இதன் கிரில் வளைவானதாகவும் காட்சியளிக்கின்றது. மேலும், இதன் பான்னெட் மிகவும் தெளிவாக இருக்கின்றது. எந்தவொரு கோடுகளும் அதன் மேல் பக்கத்தில் வழங்கப்படவில்லை.
அதேவேளையில், இந்த காருக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. ஒரிஜினல் வெர்ஷனில் ஸ்டீல் ரிம்மே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக பாதுகாப்பு மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவே இந்த கார் அந்த காலகட்டத்தில் காட்சியளித்தது. ஆனால், போட்டி நிறுவனங்களின் வருகையால் அது தோல்வியைச் சந்தித்தது.

அதாவது, மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் வருகையின் காரணமாகவே அம்பாசடர் இந்தியாவில் தோல்வியைச் சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக அதன் அனைத்து உற்பத்தி பணிகளையும் நிறுத்தியது. இதன் விளைவாக இப்போது ஒரு யூனிட்கூட விற்பனைக்கு கிடைக்காத நிலை தென்படுகின்றது.
அதேவேளையில், ஹிந்துஸ்தான் விரைவில் அதன் அம்பாசடர் பிராண்டின்கீழ் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது இம்முறை ஐசிஇ வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களையே அது இம்முறை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டாடா நெக்ஸான் இவி தொடங்கி பிஎம்டபிள்யூ, பென்ஸ் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர்.
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான்.இவி-யே இருக்கின்றது. இதற்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே விரைவில் மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன. அந்தவகையில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் மற்றும் இடபிள்யூஎக்ஸ் போன்ற கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









