கார்கள் தயாரிக்க இந்தியாவை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!! ஹோண்டா வரையில் ஒரே பிளான் தான்...
ஹோண்டா கார்ஸ் (Honda Cars), இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒருபடி மேலே சென்று, இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. வழக்கத்தை விட இது எவ்வளவு அதிகம் என்பதையும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எத்தனை கார்களை ஹோண்டா ஏற்றுமதி செய்கிறது என்பதையும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது மற்ற வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் செலவு குறைவாகும். இதன் காரணமாக, நிறைய கார் நிறுவனங்கள் இந்தியாவை கார் உற்பத்தி மையமாக பார்க்கின்றன. அந்த கார் நிறுவனங்களுள் ஒன்று, ஹோண்டா ஆகும். ஏனெனில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 5 ஆயிரம் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது என்றால், அதனை காட்டிலும் சற்று அதிகமாக 5500 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து 11,143 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது, 2023 ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 1,074 அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 10 ஆயிரத்து 69 கார்களை மட்டுமே ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
2023 ஆகஸ்ட்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி இருந்தது. ஆனால், கடந்த 2024 ஆகஸ்ட்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களை காட்டிலும் வெளிநாடுகளுக்கு அதிக ஹோண்டா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 5,326 ஆகும்.

2023 ஆகஸ்ட் மாதத்தில் 7,880 கார்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. ஆனால், இந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 4,624 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 5,817 ஆகும்.
அதாவது, உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2,189 ஹோண்டா கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் ஹோண்டா கார்களாக எலிவேட் மற்றும் சிட்டி கார்கள் விளங்குகின்றன.

ஹோண்டா கார்களின் ஏற்றுமதி அதிகரித்து வந்தாலும், உள்நாட்டு விற்பனை குறைவாக பதிவாகுவது ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு நிச்சயமாக வருத்தமளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும். இதில் இருந்து, உள்நாட்டில் இந்த நிறுவனம் ஏதோ ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது என்பதை மட்டும் அறிய முடிகிறது. அதேநேரம் மறுபக்கம், ஹோண்டா கார்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைவானதாக இருப்பதன் காரணமாகவே, ஹோண்டா போன்ற நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய கார்கள் மார்க்கெட்டில் தாக்குப்பிடித்து நிற்கின்றன. இருப்பினும், ஒரு நாட்டை கார்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே பயன்படுத்துவது எந்த அளவிற்கு சரியாக வரும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









