உற்று பார்த்தால் தான் உண்மையில் இது என்ன காரென்று தெரிகிறது... அனைவரையும் ஏமாற்றும் கார்!!
லம்போர்கினி (Lamborghini) கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வாங்கினால் லம்போர்கினி காரை தான் வாங்குவேன் என ஒற்றை காலில் நிற்பவர்களும் உலகளவில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் இங்கு, தான் விரும்பிய லம்போர்கினி காரை பெற்றுள்ளார். ஆனால், இது உணமையான லம்போர்கினி கார் கிடையாது. போலியான லம்போர்கினி கார் ஆகும். அடிப்படையில் இது ஒரு ஹோண்டா (Honda) கார் ஆகும். ஹோண்டா கார் எப்படி இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு கார் மாதிரி மற்றொரு காரை மாற்றும் பழக்கம் உலகளவில் மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் இன்னமும் நிறைய பேரால் சொகுசு கார்களை கனவில் மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள முடிவதால், அத்தகையவர்கள் வேறு வழியில்லாமல் தாங்கள் விரும்பும் காரை வேறொரு காரில் இருந்து கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

ஒரு சிலரது முயற்சி பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு கூட இருந்துள்ளது. அவ்வாறு இங்கு ஒருவர் ஹோண்டா சிவிக் (Honda Civic) காரை ரூ.15 கோடி மதிப்பிலான லம்போர்கினி செண்டெனாரியோ (Centenario) கார் போன்று மாற்றிக் கொண்டுள்ளார். ஹோண்டா சிவிக் போன்ற தாழ்வான செடான் ரக காரை செண்டெனாரியோ ஸ்போர்ட்ஸ் கார் போன்று மாற்றிக் கொள்வது கொஞ்சம் எளியது.
இருப்பினும், வெறும் 48 மணிநேரத்தில் சிவிக் கார் ஒன்றை இவ்வாறு மாற்றியுள்ளனர் என சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த போலி லம்போர்கினி காரை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர். அதனால்தான், படப்பிடிப்பிற்காக வெறும் 48 மணிநேரத்தில் சிவிக் கார் ஒன்று இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.

சிவிக் கார் எப்படி இவ்வாறான லம்போர்கினி கார் போன்று மாற்றப்பட்டது என்பதை மேக்னெடோ 11 (Magneto 11) என்கிற யூடியூப் சேனலில் தனித்தனி வீடியோவாக, ஒவ்வொரு பகுதிகளாக பதிவேற்றம் செய்துள்ளனர். இறுதியாக, வேலை அனைத்தும் முடிந்த பின் கிட்டத்தட்ட லம்போர்கினி செண்டெனாரியோ கார் ஒன்று நம் முன் காட்சியளிக்கிறது. கார்களை பற்றி அதிகமாக தெரியாதவர்கள் இது லம்போர்கினி கார் என நிச்சயமாக நம்பிவிடுவார்கள்.
காருக்கு முன்பக்கத்தில் ஷார்ப்பான பம்பர், சறுகலான பொனெட் மற்றும் நேர்த்தியான டிசைனில் ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடிஃபைடு ஹோண்டா சிவிக் காரில் கத்திரிக்கோல் டிசைனில் கதவுகளும், பெரிய அளவில் அலாய் சக்கரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களிலும் இந்த ஹோண்டா சிவிக் கார் லம்போர்கினி செண்டெனாரியோ கார் போன்று உள்ளது. பொதுவாக, லம்போர்கினி கார்களின் பின்பகுதி தான் நிறைய சிக்கலான டிசைன்களை கொண்டிருக்கும்.

இருப்பினும், இந்த ஹோண்டா சிவிக் காரின் பின்பக்கத்தையும் கண்ணாடிகளுடன் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். இத்துடன், காரின் உட்புறத்திலும் நிறைய வேலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். காருக்குள் டேஸ்போர்டு கார்பன்-ஃபைபர்-டைப் ஃபினிஷிங்கில் உள்ளது. காருக்குள் கேபின் முழுவதையும் மாற்றி அமைத்துள்ளனர். இருப்பினும், டோர் பேனல்கள் வழக்கமான சிவிக் காரில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளது.
லம்போர்கினி செண்டெனாரியோ ஆனது ஓர் கன்வெர்டபிள் கார் ஆகும். அதாவது, காரின் மேற்கூரையை தேவைகேற்ப திறந்து மூடிக் கொள்ளலாம். இந்த ஹோண்டா சிவிக் காரிலும் இந்த வசதியை கொண்டுவந்துள்ளனர். காரின் மேற்கூரையை திறந்து மூடுவதற்கான மோட்டார் இந்த சிவிக் காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையான லம்போர்கினி செண்டெனாரியோ கார் போன்று இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் காரும் பார்ப்பதற்கு அருமையானதாக உள்ளது. இருப்பினும், இது எல்லாம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான். லம்போர்கினி செண்டெனாரியோ கார் இன்னும் தாழ்வானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









