புதுசா காரை இந்த மாதிரி வாங்கிவிட்டால் காசு மிச்சம்!! தீபாவளியை டார்க்கெட் செய்துள்ள ஹோண்டா!
ஹோண்டா கார்ஸ் (Honda Cars) நிறுவனம் இந்தியாவில் கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. அதன் ஒரு முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டதே ஹோண்டா எலிவேட் (Honda Elevate) கார் ஆகும். இந்த நிலையில், எலிவேட் காரின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, புதியதாக அபெக்ஸ் (Apex) என்கிற பெயரில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றிய முக்கியமான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஹோண்டா எலிவேட் கார் எஸ்வி, வி, வி.எக்ஸ், இசட்.எக்ஸ் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், வி மற்றும் வி.எக்ஸ் மிட்-வேரியண்ட்களில் ஆக்ஸஸரீகள் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்த ஆக்ஸஸரீகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆக்ஸஸரீகளை வாங்குவது/ வாங்காதது வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகும்.

ஆனால், புதிய அபெக்ஸ் எடிசனின் மூலம் ஆக்ஸஸரீகளை எலிவேட் வி மற்றும் வி.எக்ஸ் வேரியண்ட்களில் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக ஹோண்டா வழங்கியுள்ளது. இதற்கேற்ப, வழக்கமான ஹோண்டா வி மற்றும் வி.எக்ஸ் வேரியண்ட்களின் விலைகளை காட்டிலும் புதிய அபெக்ஸ் எடிசனின் விலைகள் ரூ.15,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய ஹோண்டா எலிவேட் அபெக்ஸ் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.86 லட்சத்தில் இருந்து ரூ.15.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள எலிவேட் அபெக்ஸ் எடிசன் காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி, காரின் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் நிற ஹைலைட்கள் உடன் பியானோ கருப்பு நிற கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கதவுகளிலும் இந்த கருப்பு நிற கார்னிஷை பார்க்க முடிகிறது. 'Apex Edition' என்கிற முத்திரைகள் காரின் முன்பக்க ஃபெண்டர் மற்றும் டெயில்கேட்டில் வழங்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே ஐவோரி மற்றும் கருப்பு நிறங்களில் ட்யூயல்-டோன் கேபினை அபெக்ஸ் எடிசன் கொண்டுள்ளது.
ஆனால், வழக்கமான ஹோண்டா எலிவேட் வேரியண்ட்களில் டேன் மற்றும் கருப்பு நிறத்தில் கேபின் வழங்கப்படுகிறது. டேஸ்போர்டு மற்றும் டோர் பேட்களில் லெதரேட் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு காஸ்ட்லீயானதாக காட்சித்தரும் இந்த லெதரேட் ட்ரிம்கள் முன்னதாக எலிவேட் டாப் வேரியண்ட்டான இசட்.எக்ஸ் -இல் மட்டுமே வழங்கப்பட்டன.

புதிய அபெக்ஸ் எடிசனுக்கான பேக்கேஜில் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, குஷின்கள் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகளும் அடங்குகின்றன. எலிவேட் அபெக்ஸ் காருக்கான பேக்கேஜ்கள் வெளிப்பக்கத்திற்கு மற்றும் உட்பக்கத்திற்கு என இரு விதமாக வழங்கப்படுகின்றன. இதில், உட்புறத்திற்கான பேக்கேஜின் விலை ரூ.10,000 ஆகவும், வெளிப்புறத்திற்கான பேக்கேஜின் விலை ரூ.5,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையில்லை என்றால் இதில் ஒரு பேக்கேஜை வாடிக்கையாளர்கள் நீக்கிக் கொள்ளவும் முடியும்.
அதற்கேற்ப காருக்கான விலை குறைத்துக் கொள்ளப்படும். மற்றப்படி, ஹோண்டா எலிவேட் காரின் என்ஜின் ஆப்ஷன்கள் எதுவும் புதிய அபெக்ஸ் வேரியண்ட்டில் மாற்றப்படவில்லை. எலிவேட்டில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 121 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ஹோண்டா காராக எலிவேட் விளங்குகிறது. எலிவேட் காரின் விற்பனை பெரிய அளவில் இல்லையென்றாலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹோண்டா காராக எலிவேட் விளங்குகிறது. விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாகவே எலிவேட் காரில் புதிய அபெக்ஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









