ராணுவ வீரர்களின் கேன்டீன் பட்டியலில் இணைந்த ஹோண்டா எலிவேட்.. விலையை சொல்லிட்டாங்களா! எவ்வளவா இருக்கும்?
போலீஸ் கேன்டீனைப் போலவே நாடு முழுவதும் ராணுவ வீரர்களுக்கென தனி கேன்டீன் செயல்பட்டு வருகின்றது. இங்கு பொருட்கள் நம்ப முடியாத அளவிற்கு விலை குறைவாகக் கிடைக்கும். ராணவ வீரர்களின் அர்பணிப்பு சேவை மனப்பான்மைக்கு வழங்கப்படும் சலுகையாக இது பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், அவர்களின் அர்ப்பணிப்பிற்கு இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என கூறலாம்.
இந்த கேன்டீனில் வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி மின்சாதன பொருட்கள் மற்றும் வாகனங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து வாகனங்களும் இங்கு விற்பனைக்குக் கிடைத்துவிடாது. குறிப்பிட்ட சில முன்னணி கார் மாடல்கள் மட்டுமே ராணுவ கேன்டீனில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அந்தவகையில், ராணுவ கேன்டீனில் விற்பனனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலிலேயே தற்போது புதிதாக ஹோண்டா எலிவேட் எஸ்யூவி கார் இணைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலம் கழித்து ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கிய எஸ்யூவி ரக கார் மாடலே எலிவேட் ஆகும்.
இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாறி இருக்கின்றது. இதுவே தற்போது ராணுவ கேன்டீனில் இணைக்கப்பட்டு இருக்கின்து. ஏற்கனவே, ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார் மாடல்கள் ராணுவ கேன்டீனில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ராணுவ வீரர்களுக்கு என்ன மாதிரியான விலையில் எலிவேட் எஸ்யூவி கார் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சாமானிய குடிமகன் வாங்குவதைக் காட்டிலும் மிகவும் குறைவான விலையிலேயே இந்த கார் ராணுவ வீரர்களுக்கு விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி துளியும் இவர்களுக்கு விதிக்கப்படமாட்டாது.
எனவே மிகப் பெரிய அளவில், அதாவது, லட்சக் கணக்கில் ராணுவ வீரர்களால் இதன் வாயிலாக மிச்சப்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடலே ஹோண்டா எலிவேட் ஆகும்.
இந்த கார் மாடலில் எஞ்ஜினைப் பொருத்த வரை நேச்சுரல்லி அஸ்பைரேட்டட், டிஓஎச்சி, 1.5 லிட்டர், 4 சிலிண்டர், ஐ-விடெக் பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே ஹோண்டா சிட்டி செடான் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 119.35 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 145 என்எம் டார்க்கை 4,300 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.
மேலும், இத்துடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் எலிவேட்டில் வழங்கப்படுகின்றன. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.31 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு 16.92 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமிரா (பார்க் செய்ய உதவியாக இருக்கும்) மற்றும் அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் எலிவேட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவசர கால பிரேக்கிங், ரோடு டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹை-பீம் மற்றும் லீட் கார் டிபார்ச்சர் நோடிஃபிகேஷன் சிஸ்டம் மற்றும் விபத்தை தவிர்த்தல் போன்ற மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா எலிவேட்டின் விலை சமீபத்திலேயே உயர்த்தப்பட்டது. ரூ. 11.57 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த கார் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரில் தொழில்நுட்ப அம்சங்களாக 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு உள்ளது.
அது, ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 8 ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சிஸ்டம் ஆகியவைக் கொடுக்கப்பட்டு உள்ளன. இத்துடன், ஹோண்டா கன்னெக்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக ஸ்மார்ட் வாட்சுகளைக் கூட காருடன் இணைத்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாறி இருக்கின்றது. இந்த கார் ராணுவ வீரர்களின் கேன்டீனில் இணைக்கப்பட்டு இருப்பது அவர்களை மட்டுமல்ல நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இவர்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








