தாய் நாட்டுக்கே நம்மிடம் இருந்துதான் கொண்டு போகுதா! மேட்-இன் இந்தியா காருக்கு இவ்ளோ மவுசா!!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) அதன் தாய்நாடான ஜப்பானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஓர் கார் மாடலை அதிகளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன கார் மாடல்? மற்றும் இந்தியாவில் என்ன விலையில் அக்கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது? என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து எலிவேட் கார் மாடலையே ஜப்பானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்திருக்கின்றது. எலிவேட் (Elevate) ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

2023 செப்டம்பர் மாதத்திலே இந்த கார் நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நாளில் இருந்து 2024 பிப்ரவரி வரை ஹோண்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 30,365 யூனிட்டுகள் எலிவேட் காரை விற்பனைக்காக டீலர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் 2வது பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எலிவேட் மாறியிருக்கின்றது.
இத்தகைய கார் மாடலையே இந்தியாவில் இருந்து அதன் தாய்நாட்டிற்கு அதிகளவில் ஹோண்டா ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) வெளியிட்டு இருக்கும் தரவுகளின்படி, 2024 பிப்ரவரி மாத இறுதி நாளின்படி 6,809 யூனிட் எலிவேட் கார்கள் ஜப்பானுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இதேபோல் உலக அளவில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி பிப்ரவரி வரை 6,472 யூனிட்டுகள் எலிவேட் கார்களை அது ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவில் இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது.
ஜப்பானில், இந்த கார் எலிவேட் என்கிற பெயரில் இல்லாமல் டபிள்யூஆர்-வி (WR-V) எனும் பெயரிலேயே விற்கப்பட இருக்கின்றது. ஆமாங்க, இந்த கார் இன்னும் ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் அக்காரின் விற்பனையை ஜப்பான் தொடங்க இருக்கின்றது. மார்ச் 22 இல் இருந்து அதன் விற்பனையை ஹோண்டா தொடங்க இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையிலேயே எலிவேட் எஸ்யூவி காரை அதிகளவில் இந்தியாவில் இருந்து ஜப்பானிக்கு அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது ஹோண்டா. மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் யூனிட் எலிவேட் கார்களையாவது ஜப்பானில் விற்க வேண்டும் என்பது நிறுவனத்தின் இலக்காகும். இதன்படி, ஆண்டு ஒன்றிற்கு 36 யூனிட்டுகளை விற்பனைச் செய்ய அது திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை ஹோண்டா எட்டும் எனில் பின்னாளில் இந்தியாவில் இருந்து எலிவேட் கார்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை இன்னும் மிகப் பெரிய அளவில் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.5 லிட்டர், 4 சிலிண்டர், பெட்ரோல் மோட்டார் தேர்வே அங்கேயும் எலிவேட்டில் வழங்கப்பட உள்ளது.
சிறிய மாற்றமாக இந்த காரின் உட்பக்கம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஜப்பானில் விற்கப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலிவேட் காரின் உட்பக்கம் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் விஷயத்தில் இந்தியா எலிவேட் மற்றும் ஜப்பான் எலிவேட்களுக்கு இடையே வித்தியாசம் தென்படுகின்றது.
இந்த வித்தியாசங்களைக் கொண்ட எலிவேட் காரை ஹோண்டா இந்தியாவிலேயே தயார் செய்து ஜப்பானுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கின்றது. ராஜஸ்தானில் உள்ள தபுகரா ஆலையில் வைத்தே இந்த காரை ஹோண்டா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இந்த கார் ரூ. 11.57 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா செல்டோஸ், எம்ஜி அஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாகவே இந்தியாவில் எலிவேட் விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து சொந்த தாய் நாட்டிற்கு ஹோண்டா கார்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கி இருப்பது சற்றே விந்தையாக இருக்கின்றது. இருப்பினும், ஹோண்டாவின் இந்த செயல் இந்திய தயாரிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதனால் நாட்டின் கார் ஏற்றுமதி துறை வரும் நாட்களில் செழிப்பான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









