இந்த ஒரு கார் மட்டும் இல்லேனா ஹோண்டா பொழப்பு நாறி போயிரும்... சிட்டி, அமேஸை எல்லாம் வாங்க ஆள் இல்ல...
இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ள கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாதத்திற்கான மாடல் வாரியான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், புதுவரவான ஹோண்டா எலவேட் (Honda Elevate) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
ஹோண்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4,586 எலவேட் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன், ஹோண்டா எலவேட் காரின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் ஹோண்டா எலவேட் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

மிக குறுகிய காலத்திலேயே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா கார் என்ற பெருமையை எலவேட் தன்வசமாக்கியுள்ளது. கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிட்டு வருகிறது.
இதுதவிர டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும், ஹோண்டா எலவேட் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், ஹோண்டா எலவேட் போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளது என்று சொல்லலாம்.

சரி, இந்த பட்டியலில் ஹோண்டா அமேஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,580 ஆக இருந்த ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,972 ஆக குறைந்துள்ளது. இது 47 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இந்த பட்டியலில் ஹோண்டா சிட்டி (Honda City), 3வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது (தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டுள்ளது). கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,058 ஆக இருந்த ஹோண்டா சிட்டி காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,123 ஆக குறைந்துள்ளது. இது 45 சதவீத வீழ்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் புதுவரவான எலவேட் கார்தான், இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தி வருகிறது. வரும் காலங்களில் ஹோண்டா எலவேட் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் ஹோண்டா நிறுவனம் இந்த காரில் புதிய இன்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக எண்ணிக்கையில் விற்பனையாக கூடிய ஏதேனும் ஒரு புதிய காரை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. இது நடந்தால், ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் நன்றாக கால் ஊன்றலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








