வீட்ல இருக்க அத்தன பேரையும் ஒரே கார்ல ஏத்தீட்டு போகலாம்... டாடா, மஹிந்திராவிற்கு 'செக்' வைக்க வரும் புதிய கார்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

வசதிகளை பொறுத்தமட்டில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரில் இந்த வசதி வழங்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில், ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கிடைக்கும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற பிரீமியமான காராக இது இருக்கும். ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில், புதிய க்ரில் அமைப்பு, 'H' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட ட்யூயல் டோன் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) போன்ற கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய நிலையில் ஹூண்டாய் அல்கஸார் காரின் ஆரம்ப விலை 16.77 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 21.28 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








