நிலைமை இப்படி மாறும்னு எதிர்பார்க்கல... டாடாவின் ஃபார்முலாவை பின்பற்றும் ஹூண்டாய்!!
ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் அதன் அவ்ரா சிஎன்ஜி (Aura CNG) காரை ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் அறிமுகம் செய்துள்ளது. இதனால், முன்பு ஒரேயொரு சிஎன்ஜி சிலிண்டர் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த அவ்ரா சிஎன்ஜி கார் இனி இரட்டை-சிலிண்டர் உடன் கிடைக்கும். இதன் மூலமாக, காரின் பூட் ஸ்பேஸில் நிறைய இடவசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் அவ்ரா சிஎன்ஜி காரின் விலை உள்பட காரை பற்றிய மற்ற முக்கியமான விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோலுக்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலமாக சிஎன்ஜி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோலை விட சிஎன்ஜி-இன் விலை குறைவாக இருப்பதால், குறிப்பாக கார் டாக்ஸிகள் உள்ளிட்டவை சிஎன்ஜி-க்கு மாறி வருகின்றன.

இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, மாருதி சுஸுகி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி கார்களை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது. அதேநேரம், மாருதியை போன்று வேறு சில கார் நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்கின்றன. அத்தகைய கார் நிறுவனங்களுள் ஒன்று, ஹூண்டாய் மோட்டார் ஆகும்.
மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் அதிகளவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயில் இருந்து அவ்ரா சிஎன்ஜி கார் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக விற்பனையில் உள்ளது. ஹூண்டாயின் செடான் ரக காரான அவ்ராவின் சிஎன்ஜி வெர்சனாக அவ்ரா சிஎன்ஜி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்ரா சிஎன்ஜி காரில் சிங்கிள்-சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது, ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் அவ்ரா சிஎன்ஜி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அவ்ரா சிஎன்ஜி காருக்கு 'அவ்ரா ஹை-சிஎன்ஜி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய அவ்ரா ஹை-சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிஎன்ஜி கார் ஆனது 'இ' என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் சிங்கிள்-சிலிண்டர் டெக்னாலஜி தான் வழங்கப்படுகிறது. காருக்கு பின்னால் அதிக இடவசதியை பெறுவதற்காக, முதன்முதலாக ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜியில் டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தது. அதே பாணியை பின்பற்றி, ஹூண்டாய் நிறுவனம் அதன் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்து வருகிறது.

ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3வது ஹூண்டாய் சிஎன்ஜி கார் அவ்ரா ஹை-சிஎன்ஜி ஆகும். இதற்கு முன்னர், எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹை-சிஎன்ஜி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன. ஹூண்டாய் அவ்ரா ஹை-சிஎன்ஜி காரில் முன் பவர் ஜன்னல்கள், டிரைவர் சீட் அட்ஜெஸ்மெண்ட், அட்ஜெஸ் செய்யக்கூடிய பின் இருக்கை ஹெட்ரெஸ்ட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், 3.5 இன்ச்சில் ஸ்பீடோமீட்டர் மற்றும் Z-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ரிமைண்டர் என ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு, அவ்ரா ஹை-சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் பை-ஃப்யுல் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்களில் உள்ள ஒரேயொரு குறை என்னவென்றால், சிலிண்டர்கள் அடைத்துக் கொள்வதால் பூட் ஸ்பேஸில் அதிக இடவசதியை பெற முடியாது என்பதுதான். ஆனால் அந்த குறையையும் ட்யூயல்-சிலிண்டர் டெக்னாலஜி தீர்க்கிறது. இதனால், இதே பாணியில் இன்னும் நிறைய புதிய சிஎன்ஜி கார்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









