ஹூண்டாய் ஃபேக்ட்ரியை பெரிசு பண்ணனும் போலயே!! கார் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது!
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவின் 2வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா, உலகின் மிக பெரிய கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஜப்பான் மற்றும் கொரியன் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலமாக, சுஸுகி, ஹூண்டாய், கியா, டொயோட்டா போன்ற ஜப்பானிய & கொரியன் கார் நிறுவனங்களின் வணிகங்கள் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.

குறிப்பாக, தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. நடந்து முடிந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 50,201 ஹூண்டாய் கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஏப்ரலை விட 1% அதிகம் ஆகும்.
ஏனெனில், அந்த மாதத்தில் 49,701 கார்களை மட்டுமே ஹூண்டாய் இந்தியாவில் விற்பனை செய்து இருந்தது. ஆனால், இதற்கு முந்தைய 2024 மார்ச் மாதத்தில் 52,001 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கடந்த ஏப்ரலில் 2,800 ஹூண்டாய் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 1 நாள் அதிகம் என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையில் மொத்தம் 2 லட்சத்து 10,518 கார்களை ஹூண்டாய் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 1 லட்சத்து 97,408 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா, ஐ20, எக்ஸ்டர், கிரெட்டா, வெர்னா, அல்கஸார், டக்ஸன் மற்றும் வென்யூ உள்ளிட்ட கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை உள்நாட்டில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13,500 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் வெறும் 8,500 ஹூண்டாய் கார்கள் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் ஹூண்டாய் கார்கள் ஏற்றுமதி ஆனது கடந்த 1 வருடத்தில் சுமார் 58.8% அதிகரித்துள்ளது. 2023 மார்ச் மாதத்திலும் 12,600 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த 4 மாதங்களில் மொத்தமாக 46,600 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 42,420 ஹூண்டாய் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.
உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டையும் சேர்த்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 63,710 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே 58,201 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. ஆனால், 2024 மார்ச்சில் ஒட்டுமொத்தமாக 65,601 கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாய் எத்தனை கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது என்கிற விபரம் கிடைத்துவிட்டது. டாடா மோட்டார்ஸின் சேல்ஸ் ரிப்போர்ட் கிடைக்க வேண்டியதுதான் பாக்கி...


Click it and Unblock the Notifications









