ஹூண்டாயில் இந்த காரை வாங்குவதற்கு எங்கே இருந்து கூட்டம் வருதுனே தெரியல... மாருதிக்கு தண்ணி காட்டுது!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் கடந்த 2024 ஜூலை மாதத்தில் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. வழக்கத்தை காட்டிலும் எத்தனை கார்களை ஹூண்டாய் அதிகமாக விற்பனை செய்துள்ளது? அல்லது ஹூண்டாய் கார்களின் விற்பனை குறைந்துள்ளதா? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம் ஹூண்டாய் ஆகும். இந்தியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கிலான கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வரும் இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 49,013 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில், கடந்த ஆண்டு ஜூலையை காட்டிலும் இது 1,688 கார்கள் குறைவாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தில் இருப்பது கிரெட்டா ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 17,350 கிரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
அதுவே, கடந்த 2023 ஜூலை மாதத்தில் 14,062 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை 23.38%, அதாவது 3,288 அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வென்யூ கார்களின் எண்ணிக்கை 8,840 ஆகும்.

ஆனால், 2023 ஜூலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், வென்யூ கார்களின் விற்பனை 1,222 குறைந்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் எக்ஸ்டர் 6,037 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி காராக விளங்கும் எக்ஸ்டர் 2023 ஜூலையில் 7 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இந்த வரிசையில், 4வது இடத்தை ஐ20 பிடித்துள்ளது. ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான ஐ20 கடந்த ஜூலையில் 4,937 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஜூலையில் இதனை காட்டிலும் 64 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 5வது இடத்தை ஐ10 நியோஸ் 4,922 கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் பிடித்துள்ளது.

2023 ஜூலையில் 5,337 ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் செடான் ரக கார்களுள் ஒன்றாக விளங்கும் அவ்ரா கடந்த மாதத்தில் 4,757 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை காட்டிலும் 243 கார்கள் குறைவாக 2023 ஜூலையில் 4,514 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஹூண்டாயின் விலைமிக்க செடான் ரக காரான வெர்னா கடந்த மாதத்தில் 1,420 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூலையில் இதனை காட்டிலும் டபுள் மடங்கு அதிகமாக 2,858 வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவை இல்லாமல், கடந்த 2024 ஜூலை மாதத்தில் 585 அல்கஸார் கார்கள், 129 டக்ஸன் கார்கள் மற்றும் 36 ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜூன் மாதத்தில் கூட இந்தியாவில் ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்திருந்தது. ஆனால், கடந்த ஜூலையில் ஆயிரம் ஹூண்டாய் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், ஹூண்டாயின் சிறந்த விற்பனை காராக விளங்கும் வென்யூவின் விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் குறைந்துக் கொண்டே வருவதாகும்.


Click it and Unblock the Notifications









