பெட்ரோல்/ டீசல் செலவை தவிர்ப்பதற்காகவே எல்லாரும் சிஎன்ஜி-க்கு மாறுறாங்க! ஹூண்டாய் பயங்கரமாக கல்லா கட்டுது!!
ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 2வது பெரிய நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. குறிப்பாக, எஸ்யூவி கார்கள் விற்பனையில் கிரெட்டா மூலமாக ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் ஹூண்டாய் அளவு கடந்த வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக புள்ளி விபரங்கள் உடன் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிஎன்ஜி (CNG), அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயு. பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு, அவற்றிற்கு மாற்றாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கும் மாற்று எரிபொருள். அதாவது, சிஎன்ஜி கார்களிலும் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், என்ஜினை இயங்க வைக்க பெட்ரோல் நிரப்ப தேவையில்லை. அதற்கு பதிலாக சிஎன்ஜி நிரப்ப வேண்டிருக்கும்.

இதற்காக காருக்கு பின்பக்கத்தில் சிஎன்ஜி சிலிண்டர்கள் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி, சிஎன்ஜி கார்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரம், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் கடந்த சில வருடங்களில் பல்வேறு சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்துள்ளன.
ஹூண்டாய் சிஎன்ஜி கார்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹூண்டாயின் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் சிஎன்ஜி கார்களின் பங்களிப்பு 14.9% ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு பார்த்தால், ஹூண்டாய் கார்களின் மொத்த விற்பனையில் சிஎன்ஜி கார்களின் பங்களிப்பு 12.8% ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர், அவ்ரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றன.

முக்கியமாக, ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி காரை வாங்க மக்கள் பலர் வெகுவாக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். எந்த அளவிற்கு என்றால், கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களில் கிட்டத்தட்ட 40% எக்ஸ்டர் சிஎன்ஜி கார்கள் ஆகும். அதுவே, ஹூண்டாய் அவ்ரா காரை வாங்கியவர்களில் சுமார் 90.6 சதவீதத்தினர் அவ்ரா சிஎன்ஜி காரை தான் தேர்வு செய்துள்ளனர்.
இதில் இருந்து, அவ்ரா காரை சிஎன்ஜி ஆப்ஷனில் வாங்கவே பெரும்பாலான கஸ்டமர்ஸ் விரும்புகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனையில் 17.4% கார்கள் சிஎன்ஜி கார்கள் ஆகும். பொதுவாகவே, சிஎன்ஜி கார்கள் போன்ற புதுமையான கார்களுக்கு நகரத்தில் இருந்துதான் டிமாண்ட் ஆரம்பித்து, கிராமங்கள் வரையில் செல்லும்.

ஆனால், ஹூண்டாய் சிஎன்ஜி கார்களுக்கு கிராமப்புறங்களில் தான் அதிக மவுசு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மாநகரங்களை பொறுத்தவரையில், புனே, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் நிறைய பேர் ஹூண்டாய் சிஎன்ஜி கார்களை வாங்குகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல்- 2024 மார்ச் வரையிலான 1 வருடத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஹூண்டாய் கார்களில் சிஎன்ஜி கார்களின் பங்களிப்பு 11.4% ஆகும்.
இந்த 1 வருடத்திலும் நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் தான் ஹூண்டாய் சிஎன்ஜி கார்களுக்கு அதிக புக்கிங் கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் எதிர்பார்த்ததை போன்று ஹூண்டாய் சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியா முழுவதும் சிஎன்ஜி நிரப்பும் மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிஎன்ஜி நிலையங்கள் உள்ளன. இதனை 2030ஆம் ஆண்டிற்குள் 17 ஆயிரத்து 500ஆக அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. ஆதலால், இந்தியாவில் சிஎன்ஜி கார்களை தைரியமாக வாங்கலாம். அதுமட்டுமின்றி, சிஎன்ஜி கார்களை சிஎன்ஜி-இல் மட்டுமே இயக்க முடியும் என்றில்லை, பெட்ரோலிலும் இயக்கலாம்.


Click it and Unblock the Notifications









