இந்தியாவுல கத்துகுட்டிங்க எல்லாம் வளரவே கூடாது.. சோலியை முடிக்க ஹூண்டாய் களத்துல இறங்க போகுது!
இந்தியாவின் மின்சார கார் (Electric Car) பிரிவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் அபரீதமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அது வளர்ந்துக் காணப்படுகின்றது. நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV)-யே இருந்து வந்தது. இதன் இடத்தை பிடிக்கும் அளவிற்கே எம்ஜி மோட்டார்ஸ் தற்போது நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி விண்ட்ஸர் இவி (Windsor EV) உள்ளது. இந்த கார் மாடல் மட்டுமல்ல நிறுவனத்தின் மற்ற இரண்டு மின்சார கார் மாடல்களான கோமெட் இவி (Comet EV) மற்றும் இசட்எஸ் இவி (ZS EV) ஆகியவற்றிற்கும் நல்ல வரவேற்பே கடந்த மாதங்களில் கிடைத்திருக்கின்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. எம்ஜி நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து முழுமையாக ஒரு தசாப்தம்கூட ஆகவில்லை. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் 2019 ஆம் ஆண்டிலேயே இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நுழைந்தது. அதிலும், மின்சார கார்களுக்கு கடந்த சில வருடங்களாகவே அது முக்கியத்துவம் வழங்கத் தொடங்கி இருக்கின்றது.
இந்திய நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ உடன் கூட்டணியைத் தொடங்கிய பின்னரே எம்ஜி மோட்டார்ஸ் இ-வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலிலேயே அது இந்தியாவின் மின்சார கார்கள் பிரிவை மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியிருக்கின்றது. இதனால்தான் பலரும் எம்ஜியை வியப்புடன் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே எம்ஜி உட்பட மற்ற நிறுவனங்களுக்கும் சேர்த்து போட்டியை அளிக்கும் நோக்கில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விரைவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மின்சார கார் பிரிவை மையப்படுத்தி தன்னுடைய காலடி தடத்தை முழு வீச்சில் மீண்டும் பதிக்க இருக்கின்றது ஹூண்டாய் நிறுவனம்.
பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் கிரெட்டா-வின் எலெக்ட்ரிக் (Creta EV) வெர்ஷனை அந்த நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதன் காட்சிப்படுத்தல் நாள் பற்றிய விபரமே தற்போது வெளியாகி இருக்கின்றது. ஜனவரி மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜனவரி 17 ஆம் தேதி அன்று கிரெட்டா இவி வெளியீடு செய்யப்படும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஜனவரி மாதத்தில் பாரத் மொபிலிட்டி வாகன ஷோ (Bharat Mobility Show 2025) நடைபெற இருக்கின்றது. இந்த வாகன கண்காட்சியில் வைத்தே தன்னுடைய கிரெட்டா இவி-யை ஹூண்டாய் முதல் முறையாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுவரை இந்த கார் முழுமையாக தரிசனம் தந்ததில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV), எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்த பிஇ 6இ (Mahindra BE 6e) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் சவால் வழங்கக் கூடியதாக மாறும்.
மேலும், விண்ட்ஸர் இவி-யின் வாடிக்கையாளர்கள் சிலரும் கிரெட்டா இவியின் பக்கம் சாயலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு இந்த வரவு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே மிக அதிக சிறப்பம்சங்கள் தாங்கிய மற்றும் தனித்துவமான ஸ்டைலைக் கொண்டதாக கிரெட்டா இவியை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது.
கடந்த நாட்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்த கோனா இவி (Kona EV)-யில் இடம் பெற்றிருந்த சில அம்சங்களை கிரெட்டா இவியிலும் பார்க்க முடியும். அந்தவகையில், சிறிய துளைகூட இல்லாத முழுமையாக அடைக்கப்பட்ட கிரில், தனித்துவமான எல் வடிவ எல்இடி டிஆர்எல், வலது பக்கம் இரண்டு-இடப்பக்கம் இரண்டு என ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப், அழகான பம்பர் மற்றும் குரோம் பட்டை உள்ளிட்டவை இந்த காரை அலங்கரிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அழகில் மட்டுமல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் இந்த எலெக்ட்ரிக் கார் கை தேர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 138 எச்பி ஆற்றலை உருவாக்கக் கூடிய மின்சார மோட்டாரே இதில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரேஞ்சை பொருத்த வரை 400 கிமீ முதல் 450 கிமீ வரையில் ரேஞ்சை தரக் கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிரெட்டா இவி குறித்து இதுவரை வெளியாகவில்லை. இதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் ஜனவரியில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி ஷோ வாயிலாக வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, ரேஞ்ச், மின்சார மோட்டார் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை ஹூண்டாய் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








