சும்மா நிக்கும்போதே கெத்தா இருக்கே! நேத்துதான் அறிமுகம் பண்ணி வச்சாங்க.. அதுக்குள்ள ஷோரூமுக்கு வந்திருச்சு!
இந்தியர்களின் பெரிதும் தூண்டி வந்த ஹூண்டாய் கிரெட்டா என் லைன் கார் நேற்றைய தினமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வ வருகையைத் தொடர்ந்து தற்போது அந்த கார் மாடல் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார் டீலர் கார் நிறுத்துமிடத்தில் கெத்தாக நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் கிரெட்டா (Creta)-வும் ஒன்று. ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கே சிறப்பு சேர்க்கும் விதமாக அந்நிறுவனம் என் லைன் (Hyundai Creta N Line) வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் நிலவி வந்தநிலையில் அது நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே இந்த புத்தம் புதிய கார் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கிரெட்டா என் லைன் ஷோரூம் கார் நிறுத்துமிடத்தில் நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. புதிய கிரெட்டா என் லைன் ஆறு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதில் அட்லஸ் ஒயிட் எனும் ஒற்றை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் தேர்வே தற்போது காட்சி தந்திருக்கின்றது.

மூன்று ஒற்றை நிற தேர்வும், மூன்று டூயல் டோன் நிற தேர்வும் கிரெட்டா என் லைனில் வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில் ஒற்றை நிற தேர்வில் அட்லஸ் ஒயிட் உடன் சேர்த்து அபிஸ் பிளாக், டைட்டன் கிரே மேட் ஆகியவையும், இரட்டை நிற தேர்வில் தண்டர் ப்ளூ-அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோவ் கிரே-அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட்-அபிஸ் பிளாக் ரூஃப் ஆகியவையும் வழங்கப்படுகின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை கிரெட்டா என் லைனில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த சூப்பரான திறன் கொண்ட மோட்டாருடன் 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் விஷயத்திலும் இந்த கார் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, வழக்கமான கிரெட்டாவைக் காட்டிலும் மிக மிக அதிக சிறப்பு வசதிகளையும், கவர்ச்சியான அணிகலன்களையும் கிரெட்டா என் லைன் தாங்கி இருக்கின்றது. அந்த வகையில் காரின் உள் மற்றும் வெளிப்புறத்தில் சிவப்பு நிற அக்செண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, சிவப்பு நிறத்தாலான நூலைக் கொண்டே இருக்கைகளும் தைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாதிரியான வேலைப்பாடுகள் கிரெட்டா என் லைன் காரை அதிக ஸ்போர்ட்டியானதாக காட்சியளிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம், டூயல் டிஜிட்டல் திரை, பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை, ப்ளூ-லிங்க் கார் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் ஓடிஏ அப்டேட் உள்ளிட்ட அம்சங்களும் புதிய கிரெட்டா என் லைனில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அறிமுகமாக இந்த எஸ்யூவிக்கு ரூ.16.82லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். என்8 மற்றும் என்10 என இரண்டு விதமான வேரியண்டுகளில் கிரெட்டா என் லைன் விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டா காருக்கு டிமாண்ட் மிக மிக அதிகம். சொல்லப்போனால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு யூனிட் கிரெட்டா இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலுக்கே சிறப்பு சேர்க்கும் விதமாக ஹூண்டாய் தற்போகு கிரெட்டா என் லைன் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









