கொரியன் காரன் மூளையே மூளை தான்... இந்தியாவில் மக்கள் அதிக பேர் வாங்கும் கார்களில் எது பெஸ்ட்?
இந்தியாவில் கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்தது, ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) ஆகும். இது ஒரு கொரியன் ஸ்டைல் எஸ்யூவி கார் ஆகும். இதேபோன்று, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்றொரு கொரியன் கார் கியா செல்டோஸ் ஆகும். ஹூண்டாயும், கியா நிறுவனமும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதன் காரணமாகவே, உற்பத்தி செலவை குறைக்கும் விதமாக, கிரெட்டா மற்றும் செல்டோஸ் என 2 கார்களும் ஒரே மாதிரியானவைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும், இவை இரண்டிற்கும் இடையே சில, பல வேறுப்பாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.
பரிமாண அளவுகள்: ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் இரண்டும் அவற்றின் புதிய தோற்றத்தில் நேர்த்தியான டிசைனை பெற்றுள்ளன. ஆனால் குறிப்பாக, புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் அதன் புதிய தோற்றத்தில் முன்பை விட கவர்ச்சிக்கரமான தோற்றத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே, கிரெட்டா கார்களின் விற்பனை சமீப மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.

ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்கள் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், கிரெட்டாவை காட்டிலும் கியா செல்டோஸ் நீளமானதாகவும், அகலமானதாகவும் விளங்குகிறது. ஆனால், கிரெட்டா கூடுதல் நீளமானதாகும். இந்த இரு கொரியன் கார்களிலும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2610மிமீ ஆக உள்ளது.
என்ஜின்: 2024 ஹூண்டாய் கிரெட்டாவில் 3 வெவ்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் 3 பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் ஒரு டீசல் என்ஜின் அடங்குகின்றன. இதில், 1.5 லிட்டர் எம்.பி.ஐ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 144 என்.எம் டார்க் திறன் வரையிலும், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 157 பிஎச்பி மற்றும் 253 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகின்றன.

1.5 லிட்டர் யு2 சி.ஆர்.டி.ஐ டீசல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 250 என். எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை கிரெட்டாவில் பெறலாம். 6-ஸ்பீடு மேனுவல், ஐவிடி, 7-ஸ்பீடு டிசிடி மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. கியா செல்டோஸிலும் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இன்னும் சொல்ல போனால், கிரெட்டாவில் வழங்கப்படும் அதே என்ஜின் ஆப்ஷன்கள் தான் செல்டோஸிலும் கொடுக்கப்படுகின்றன. என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் கூட இரண்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. அதேபோல், கியா செல்டோஸில் 6-ஸ்பீடு மேனுவல், ஐவிடி, 6-ஸ்பீடு மேனுவல் ஐஎம்டி, 7-ஸ்பீடு டிசிடி மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்: இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்கள் தொழிற்நுட்ப வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளன. கிரெட்டாவில் வழங்கப்படும் தொழிற்நுட்ப வசதிகளில் பெரும்பாலானவை கியா செல்டோஸிலும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எல்இடி ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்-கள், 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை இரு கார்களும் பெறுகின்றன.
இவை மட்டுமின்றி, ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, பனோராமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெண்டிலேட்டட் இருக்கைகள், காருக்குள் வண்ண விளக்குகள், பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் 360-டிகிரி கேமரா போன்றவையும் கிரெட்டா & செல்டோஸ் என இரண்டிலும் வழங்கப்படுகின்றன. ஆனால், செல்டோஸ் எக்ஸ்-லைன் காரில் மட்டுமே ஹெட்-அப் டிஸ்பிளே கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் இவை இரண்டும் இந்தியாவின் தவிர்க்க முடியாத எஸ்யூவி கார்களாக உள்ளன. மேலும், இவை இரண்டும் இந்த 2024ஆம் ஆண்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ஆதலால், இவை இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது கொஞ்சம் கடினம் தான். பெரும்பாலான மக்கள் இதில் தேர்வு செய்வது ஹூண்டாய் கிரெட்டா ஆகும்.


Click it and Unblock the Notifications









