பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குட்டியான தோற்றம் கொண்ட எஸ்யூவி (Micro SUV) ரக கார் மாடல்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)-ம் ஒன்றாகும். இந்த காரின் உரிமையாளரே அந்த கார் பற்றிய ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது, தன்னுடைய ஹூண்டாய் எக்ஸ்டர் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அதிக மைலேஜை தந்துக் கொண்டிருப்பதாகவே அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார். அப்படி என்ன மைலேஜை அந்த கார் தருகின்றது? எப்படி இது சாத்தியம்? அதிகம் மைலேஜ் தருவதற்காக வேற ஏதாச்சும் வேலையை அக்காரில் அதன் உரிமையாளர் செய்திருக்கின்றாரா? என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்குமான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூலை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட கார் மாடலே ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகும். இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான பஞ்ச் (Punch) கார் மாடலுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
டாடாவின் இந்த தயாரிப்பே தற்போது நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலாக மாறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் கார் மாடலுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது புதிய ஹூண்டாய் எக்ஸ்டர். இந்த கார் மாடலே 33 கிமீ வரை மைலேஜ் தந்துக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் கூறி உள்ளார்.

இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, காரில் உள்ள திரை காண்பிக்கும் மைலேஜ் விபரங்கள் பற்றிய புகைப்பட ஆதாரங்களையே அவர் வெளியிட்டு இருக்கின்றார். தீபக் ராய் எனும் அந்த நபர் பயன்படுத்தி வருவது எக்ஸ்டர் கார் மாடலின் சிஎன்ஜி வெர்ஷனாகும். இந்த ஆப்ஷனில் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33 கிமீ மைலேஜ் என்பது சாத்தியமே.
இதையே தீபக் ராயும் ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கின்றார். அவர் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதே அதிகபட்ச மைலேஜான 33 கிமீட்டரைப் பெற்றிருக்கின்றார். பயணம் முழுக்க ஏசி-யை ஆன் செய்தவாறு பயணித்தாலும் 30 கிமீ வரை ஒரு கிலோவிற்கு மைலேஜ் கிடைக்கிறது என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

இந்த தகவல் ஒட்டுமொத்த கார் காதலர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, மைலேஜை அதிகம் விரும்பும் கார் காதலர்களை இந்த தகவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோலில் பயணிக்கும்போது 17 கிமீட்டர் வரையில் மட்டுமே மைலேஜ் வழங்கியது என்றும் தீபக் ராய் கூறி இருக்கின்றார்.
மேலும், டிராஃபிக் மற்றும் வேகத்தை பொருத்து இந்த மைலேஜ் திறன் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார். இவரின் இந்த கூற்றை வைத்து பார்க்கையில் அதிகம் மைலேஜை விரும்புவர்களுக்கு சிஎன்ஜி கார்களே மிக சிறந்த தேர்வாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாக தெரிகின்றது.

இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்கள் மிகப் பரந்த அளவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் இவர்களே இந்த பிரிவில் தாராளமான கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலும், சிஎன்ஜி கார்களுக்கான அடிப்படை வசதிகளும் தற்போது நாட்டில் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் விளைவாகவும், அதிகம் மைலேஜ் கிடைக்கின்ற காரணத்தினாலும் இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே புதிய வாடிக்கையாளர்களையும் சிஎன்ஜி கார்களின் ஈர்க்கும் விதமாக புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. சந்தையில் ரூ. 6.12 லட்சம் என்கிற விலையிலேயே எக்ஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த காரை அதிகம் மைலேஜ் தரும் நோக்கிலேயே ஹூண்டாய் வடிவமைத்திருக்கின்றது. உதாரணமாக காற்றால் காரின் வேகம் தடைப்படக் கூடாது என்பதற்காக அதற்கு காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் உருவ தோற்றம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மிகவும் இலகுவான எடைக் கொண்ட சேஸிஸ்களைக் கொண்டே அக்காரை நிறுவனம் கட்டுமானம் செய்திருக்கின்றது.
இதுதவிர க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுவும், அதிக மைலேஜ் திறனில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கின்றது. இத்துடன், இந்த காரில் ஆன்-போர்டு நேவிகேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது உங்கள் வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப பாதையை மாற்றி செல்ல மேப்பைக் காண்பிக்கும்.
இவ்வாறு செய்வதனாலும் எரிபொருள் சிக்கனத்தைச் செய்து மைலேஜை கூட்டிக் கொள்ள முடியும். இதுதவிர, இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் எரிபொருள் சிக்கனத்தை செய்து மைலேஜை அதிகரிக்கச் செய்கின்ற தொழில்நுட்பங்களை வழங்கி இருக்கின்றது. மேலும், தீபக் ராயும் இந்த காரில் அதிக மைலேஜை பெற சில நுணுக்கங்களைக் கையாண்டிருக்கின்றார். இதனாலேயே அவரால் அதிகபட்ச மைலேஜை பெற முடிந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜை பெற வேண்டும் எனில் ரெகுலராக சர்வீஸ் செய்தல் வேண்டும். அத்துடன், போதுமான அளவு டயர்களில் காற்று இருத்தல் வேண்டும். மேலும், அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது. இதேபோல், டிராஃபிக் மிகுந்த சாலைகளையும் தவிர்த்தல் வேண்டும். மிக முக்கியமாக நீண்ட நேரம் சிக்னலில் நிற்க நேரிட்டால் வாகனத்தை அனைத்துவிட்டு காத்திருத்தல் வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் உங்களுடைய வாகனமே அதிக மைலேஜை வழங்கக் கூடியதாக மாறும்.


Click it and Unblock the Notifications









