சைஸில் ரொம்ப சின்னது... 5 பேருக்கு ஏற்ற ஹூண்டாய் கார்!! புது வெர்சனில் அறிமுகம்
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் எக்ஸ்டர் (Exter) எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு அதற்குள் 1 வருடம் உருண்டோடி விட்டது. ஹூண்டாய் நிறுவனத்தின் அளவில் சிறியதான எஸ்யூவி காராக எக்ஸ்டர் விளங்குகிறது. ஹூண்டாயில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்டரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'நைட்' (Knight) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எக்ஸ்டர் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பெயருக்கு ஏற்ப புதிய எக்ஸ்டர் நைட் எடிசன் கார் ஆனது முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிறத்திலான கார்கள் குறிப்பாக இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திழுக்கும். புதிய எக்ஸ்டர் நைட் எடிசன் கார் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும்.

மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த பெட்ரோல் என்ஜினை எக்ஸ்டர் நைட் எடிசனில் வாங்கலாம். எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் விற்பனைக்கு கிடைக்கும். புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8,38,200இல் இருந்து அதிகப்பட்சமாக ரூ.10,42,800 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய எக்ஸ்டர் காரின் வெளிப்பக்கத்தில் ஸ்போர்டியான கருப்பு நிறத்தில் சைடு சில் கார்னிஷ், சிவப்பு நிற கோடு உடன் முன்பக்க பம்பர் & பின்பக்க டெயில்கேட், அதே சிவப்பு நிறத்தில் பிரேக் காலிபர்கள் உள்ளிட்டவை கிடைக்கும். முன்பக்க & பின்பக்க ஸ்கிட் பிளேட் மற்றும் ஆர்15 அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு ஏன்... ஹூண்டாய் நிறுவனத்தின் லோகோ கூட கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளேயும் சிவப்பு நிறத்தை நிறைய இடங்களில் காண முடிகிறது. இதன்படி, தரை பாய் மற்றும் இருக்கைகளில் சிவப்பு நிற தையல்கள் உள்ளன. தரையில் ஒளிரக்கூடிய விளக்குகளும் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உட்பக்க கதவு கைப்பிடிகள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கஃப் தட்டு மெட்டலில் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரை ஸ்டார்ரி நைட், அட்லாஸ் வெள்ளை, ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், ஷேடோவ் கிரே என்கிற 5 விதமான மோனோடோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். இதில் அபிஸ் பிளாக் மற்றும் ஷேடோவ் கிரே என்பன புதியதாக வழங்கப்பட்டுள்ளவை ஆகும். இவை மட்டுமின்றி, அபிஸ் கருப்பு நிற மேற்கூரை உடன் ரேஞ்சர் காக்கி, அபிஸ் கருப்பு நிற மேற்கூரை உடன் ஷேடோவ் கிரே என்கிற இரு ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் எக்ஸ்டரை வாங்கலாம்.

எக்ஸ்டர் நைட் எடிசனின் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி தருண் கார்க் கூறுகையில், "இன்றைய இளம் இந்திய வாடிக்கையாளர்களின் துணிச்சலான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிசனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஹூண்டாய் எக்ஸ்டர் இன்றுவரை 93,000 யூனிட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி நேர்மறையான ஆதரவை பெற்றுள்ளது.
எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் கருப்பு நிறத்தின் வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் நைட், வாடிக்கையாளர்களின் மாறிவரும் இரசனையை பிரதிப்பலிக்கிறது. அதன் இளமை மற்றும் பிரீமியம் தரத்திலான வடிவமைப்புடன், ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் ஆனது வாடிக்கையாளர்களை புது, புது இடங்களுக்கு கொண்டு செல்லவும், ஹூண்டாய் எஸ்யூவி வாழ்க்கையை வாழ சிலிர்ப்பான அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் ஆனது அளவில் சிறியதான மைக்ரோ-எஸ்யூவி கார் ஆகும். இதனால், இந்த காரின் விலை குறைவாக இருப்பதன் காரணமாகவே எக்ஸ்டர் காரை பல தரப்பு மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இத்தகைய காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வெற்றிக்கரமாக 1 வருடத்தை ஹூண்டாய் கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications









