27 கிமீ மைலேஜ் தருதா! விலை குறைவான காரை வாங்க க்யூ-வில் நிற்கும் வாடிக்கையாளர்கள்! டாடாவுக்கு டஃப் குடுக்குது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய சந்தையில் 6,908 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ள அசத்தியுள்ளது. இதன் மூலமாக, நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகமாக விற்பனையான ஹூண்டாய் கார்களின் பட்டியலில் எக்ஸ்டர் 3வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 2 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்கள் இருக்கின்றன. ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கையை நம்மால் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட முடியாது.

ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.43 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஓரளவிற்கு விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரில், ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், சன்ரூஃப் மற்றும் ட்யூயல் கேமராக்களுடன் டேஷ்கேம் ஆகியவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்-ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய, அதே நேரம் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் ஏற்றது என்பது எங்களுடைய கருத்து. இது டாடா பன்ச் (Tata Punch) காருக்கு சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








