ஹூண்டாயில் கார் வாங்குவதாக இருந்தால், இப்படியொரு காரை வாங்கணும்!! மார்க்கெட்டுக்கு புதுசு!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS) காரில் புதியதாக 'கார்ப்பிரேட்' (Corporate) என்கிற பெயரில் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இதனாலேயே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக இந்த ஹூண்டாய் கார் உள்ளது. இருப்பினும், சமீப காலமாக, கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை குறைந்து வருகிறது. கடந்த 2024 மார்ச் மாதத்தில் 5,034 கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் இது 4,270 குறைவாகும். இவ்வாறு விற்பனை மெல்ல மெல்ல குறைந்து வருவதால், கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனையை அதிகரிக்க இந்த காரில் கார்ப்பிரேட் என்கிற பெயரில் புதியதாக கூடுதலாக ஒரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பிரேட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.93 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் மற்ற வேரியண்ட்களில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக புதிய கார்ப்பிரேட் வேரியண்ட்டில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, 38 செ.மீ விட்டத்தில் ட்யூயல்-டோன் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ஏற்றவாறு, காரின் முன்பக்க க்ரில் பகுதி கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

காரின் கதவுகளில் வெளிப்பக்க கைப்பிடிகள் மற்றும் வெளிப்பக்கத்தில் இருக்கும் கண்ணாடிகள் உள்ளிட்டவை காரின் உடல் நிறத்தில் கிடைக்கும். அதாவது, தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்படாது. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்கள் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளதால், கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய கார்பிரேட் வேரியண்ட்டை பின்னால் இருந்து பார்க்க இன்னும் அழகாகவும், மாடர்ன் தோற்றத்திலும் காட்சியளிக்கிறது.
அட்லாஸ் வெள்ளை, டைபூன் சில்வர், டைடன் கிரே, டீல் நீலம், ஃபியரி சிவப்பு, ஸ்பார்க் பச்சை மற்றும் புத்தம் புதிய அமேசான் கிரே நிறத்திலும் இந்த புதிய வேரியண்ட்டை வாங்கலாம். 'கார்ப்பிரேட்' என்ற லோகோ ஆங்கிலத்தில் காரில் பல்வேறு இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே கார் இரட்டை கிரே நிறங்களில் காட்சியளிக்கிறது. வேகமானி 8.89 செ.மீ அளவில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்பீடோ மீட்டருடன் கிடைக்கும் மல்டி-ஃபங்க்சன் டிஸ்பிளே மூலமாக காரை பற்றிய விபரங்களை பெறலாம். இந்த காரில் ஓட்டுனர் இருக்கையை தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ் செய்துக் கொள்ளலாம். முன் இருக்கையில் அமர்பவர்கள் கால் வைக்கும் பகுதியில் விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் இருக்கைக்கு பின்னால் பொருட்களை வைத்துக் கொள்ள ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், பொழுதுப்போக்கிற்காக புதிய கார்ப்பிரேட் வேரியண்ட்டில் 17.14 செ.மீ-இல் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே ஆடியோ சிஸ்டம் உள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய கார்ப்பிரேட் வேரியண்ட்டை 1.2 லிட்டர் காப்பா பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் புதிய கார்ப்பிரேட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7,57,900 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கார்கள் என்றாலே விலை மிக்கவை என்கிற பார்வை நம் மக்களிடத்தில் உள்ளது. ஆனால், கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற விலை குறைவான, அளவில் சிறியதான ஹூண்டாய் கார்களும் இந்தியாவில் விற்பனையில் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனையை புதிய கார்ப்பிரேட் வேரியண்ட் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









