வீட்டுக்கே 2 சிலிண்டர் தேவைப்படும்போது காருக்கு தேவைப்படாதா!! கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜியில் டூயல் சிலிண்டர்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்து, அதன் முக்கிய தயாரிப்புகள் சிலவற்றில் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 Nios)-லும், ஹூண்டாய் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே தற்போது ஹூண்டாய் நிறுவனம் இரண்டு சிலிண்டர்கள் வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது. இது கிராண்ட் ஐ10 நியாஸ் எச்ஒய்-சிஎன்ஜி ட்யூவோ (Grand i10 Nios Hy-CNG Duo) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 7 லட்சத்து 75 ஆயிரத்து 300 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஹூண்டாய் நிறுவனம் முன்பு இந்த கார் மாடலில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டும் மிகப் பெரிய அளவில் வழங்கி வந்தது.

இதையே தற்போது இரண்டாக பிரித்து சிறிய உருவத்தில் வழங்கி இருக்கின்றது. ஹூண்டாயின் இந்த செயலினாலேயே கிராண்ட் ஐ10 நியாஸின் பூட் ஸ்பேஸ் பலமடங்கு மேம்பட்டு இருக்கின்றது. சொல்லப்போனால் முன்னதாக காணப்பட்ட பூட் ஸ்பேஸ் பிரச்னை தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இனி லக்கேஜை கொஞ்சமாகதான் எடுத்துபோக வேண்டும் என்கின்ற நிபந்தனை இந்த காரில் இருக்காது.
ஹூண்டாய் ஐ10 நியாஸ் சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே சிஎன்ஜி பற்றாக்குறை அல்லது சிஎன்ஜி தீர்ந்துபோகும் பட்சத்தில் பெட்ரோலை நிரப்பி இந்த காரில் பயணித்துக் கொள்ள முடியும். ஹூண்டாய் நிறுவனம் இதன் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே பயன்படுத்தியே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மோட்டாரிலேயே சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு சிஎன்ஜியால் இயங்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஸ்மூத்தான சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இடையிலான மாற்றத்தை வழங்குவதற்காக எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் (Electronic Control Unit) இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது.
இந்த கார் 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இப்போது வரை 4 லட்சம் யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இரட்டை சிலிண்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வரும் நாட்களில் இந்த காரின் விற்பனையை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என நம்பப்படுகின்றது.
இந்த டூயல் சிலிண்டர் வசதி கிராண்ட் ஐ10 நியாஸ்-இன் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் விலை ரூ. 8.30 லட்சம் ஆகும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடல் ஆகும்.
இந்த காரில் புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின்விளக்கு, எல்இடி டெயில் லைட், ரூஃப் ரெயில்கள், சுறா மீனின் துடுப்பைப் போன்ற அமைப்புடைய ஆன்டெனா, 20.25 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கால் வைக்கும் இடத்தில் லைட் வசதி, பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள் மற்றும் டில்ட் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், பின் பக்கத்திற்கான பார்க்கிங் கேமிரா, டே-நைட் ஐஆர்விஎம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களே கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே சிஎன்ஜி கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியாஸில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்திலேயே நிறுவனம் அதன் எக்ஸ்டர் சிஎன்ஜியில் டூயல் சிலிண்டர் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








