சன்ரூஃப், டிரைவருக்கு உதவி செய்யும் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் ஹூண்டாயின் குட்டி எலெக்ட்ரிக் கார்..
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் நிலவும் எஸ்யூவி (SUV) காரின் மீதான தாகத்தை தீர்க்கும் விதமாக பஞ்ச் (Punch) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் குட்டியான எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு போட்டியளிக்கும் விதமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்டர் (Exter) எனும் கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இதற்கும் போட்டியளிக்க வேண்டும் என்பதே ஹூண்டாயின் இப்போதைய திட்டமாக உள்ளது. பஞ்ச்.இவி (Punch.EV)-க்கு போட்டியாக அது இன்ஸ்டர் (Inster EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேஸ்பர் (Casper) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் அந்த கார் மாடலை, ஹூண்டாய் தற்போது வெளியீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூசன் சர்வதேச வாகன கண்காட்சி 2024 (2024 Busan International Mobility Show)-லேயே இந்த கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. தென்கொரியாவில் உள்ள பூசன் எனும் பகுதியில் இந்த வாகன கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. கேஸ்பர், இந்க காரே இந்தியாவில் சிறிய மாற்றங்களுடன் எக்ஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
கேஸ்பர் காரை தழுவி இந்த கார் தயார் செய்யப்பட்டு இருந்தாலும், தனித்துவமான தோற்றத்தை இன்ஸ்டருக்கு அது வழங்கி இருக்கின்றது. மேலும், அக்காரை சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் பிரிவிலேயே ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் விற்பனைக்கான அறிமுகம் எப்போது அரங்கேறும் என்பது பற்றிய துள்ளிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், நிறுவனத்தின் இப்போதைய வெளியீட்டு செயலை கருத்தில் கொண்டு பார்க்கையில் இன்னும் சில மாதங்களில் அக்காரை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என தெரிகின்றது. அதேவேளையில், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் முதலில் இந்த கார் கொரியாவிலேயே விற்பனக்கு வர இருப்பதாக தெரிவிக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் எக்ஸ்டர் இவி விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவிலும் இந்த கார் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் எக்ஸ்டர் இவி எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் இது விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இன்ஸ்டர் எலெக்ட்ரிக் காரை மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. இதற்காக வெளிப்புறத்தில் மிகவும் வலுவான தோற்றத்தை பிரதிபலிக்கும் ஃபெண்டர்கள், உயர் தொழில்நுட்ப சர்க்யூட் போர்டு போன்ற பம்பர் மற்றும் கண்ணைக் கவரும் ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இது வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, எல்இடி ப்ரொஜெக்ஷன் ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் வெளிப்புறம் (மாறுபட்ட கருப்பு நிற மேற்கூரை) ஆகியவையும் எக்ஸ்டர் எலெக்டரிக் காரின் லுக்கை மேலும் முரட்டுத் தனமானதாக மாற்றும் நோக்கில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
இதேபோல் தொழில்நுட்பங்கள் விஷயத்தில் இந்த கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையிலேயே உள்ளது. அந்தவகையில், இன்ஸ்டர் எலெக்ட்ரிக் காரில் 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், நேவிகேஷன் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது.
மேலும், சிறப்பு வசதியாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து இருக்கைகளையும் மடித்துக் கொள்ள முடியும். டிரைவர் இருக்கையையும் மடித்துக் கொள்ள முடியும். குறிப்பாக, முன் பக்கத்தில் பெஞ்ச் வகை இருக்கை, சூடாகும் திறனுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஸ்டீயரிங் வீலிலும் சூடாகும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
குளிர் காலங்களில் டிரைவர்கள் கதகதப்பான அனுபவத்துடன் டிரைவ் செய்ய ஏதுவாக இந்த அம்சங்களை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, இந்த காரில் சன்ரூஃப்-ம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. பேட்டரி பேக்கைப் பொருத்து வரை இன்ஸ்டர் இவி-யில் இரண்டு விதமான தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.
42 kWh மற்றும் 49 kWh ஆகியவையே அவை ஆகும். இலை ஓர் முழு சார்ஜில் 300 கிமீ முதல் 355 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. மேலும், இந்த காரை டிசி உயர்-பவர் சார்ஜிங் ஸ்டேஷனைப் பயன்படுத்தி சார்ஜ் செய்தால் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும் என கூறப்படுகின்றது.
இந்த வாகனத்தை 11 kW ஆன்-போர்டு சார்ஜரைப் பயன்படுத்தியும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதேபோல் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதிலும் இந்த கார் நம்மை மிகப் பெரிய வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஓட்டுநர் உதவி அம்சங்கள் தொடங்கி விபத்தின் போது பாதுகாப்பை வழங்கும் அம்சம் என பலதரப்பட்ட அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், காரை சுற்றி கண்கானிக்கும் வசதி, பார்க்கிங்கின்போது ஏற்படும் மோதலை தவிர்க்கும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், முன்னோக்கி நகரும்போது ஏற்படும் மோதல் தவிர்க்கும் வசதி, லேன் கீப் அசிஸ்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்புகளை இந்த குட்டி எலெக்ட்ரிக் கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது. இதுபோன்று அனைத்திலும் அதிக சிறப்புகளைத் தாங்கியதாகவே இன்ஸ்டர் இவி தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்டர் இவி எனும் பெயரிலும், சற்றே குறைந்த அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த கார் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இந்தியாவிற்கான எக்ஸ்டர் இவியில் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று அக்காரின் விலையை குறைப்பதற்காக இன்னும் பல அம்சங்கள் அந்த காரில் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








