ஹூண்டாய் களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! டாடாவுக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்!
உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. ஹூண்டாய் நிறுவனம் கூடிய விரைவில் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதன் டீசர் புகைப்படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான பெயரை சர்வதேச அளவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி (Hyundai Inster EV) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில் டீசர் புகைப்படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான பெயர் ஆகியவை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

வசதிகள் பற்றிய விபரங்களோ அல்லது பேட்டரி பற்றிய விபரங்களோ இன்னும் வெளியாகவில்லை. எனினும் தென் கொரியாவில் நடைபெறும் பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோ (Busan International Mobility Show) திருவிழாவில், வரும் ஜூன் 27ம் தேதி ஹூண்டாய் இன்ஸ்டர் இவி கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது இந்த புதிய எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு தெரியவரலாம். தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில் சுமார் 350-400 கிலோ மீட்டர் டிரைவிங் ரேஞ்ச் வழங்க கூடிய பேட்டரி இடம்பெறலாம் என தெரிகிறது.

வசதிகளை பொறுத்தவரையில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது எக்ஸ்டர் (Hyundai Exter) என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான், ஹூண்டாய் இன்ஸ்டர் இவி பெயரில், இந்தியாவில் விற்பனைக்கு வரும் என கருதப்படுகிறது.
ஏனெனில் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரும், மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததுதான். அப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். எனவே இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








