உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்த அதிசயம்! தமிழர்களுக்கு இது தான் செம பொங்கல் பரிசு!
ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே ரூபாய் 20,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ 6,180 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.
தமிழகத்தை தற்போது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த 2023-ம் ஆண்டு முதல் 2032-ம் ஆண்டு அதாவது 10 ஆண்டு காலத்திற்குள் ரூபாய் 20 ஆயிரம் கோடி பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு கட்டங்களாக இந்த முதலீடு நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்த முதலீட்டை அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கும் சார்ஜிங் கட்டுமான பணிகளுக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கும் செலவு செய்யும் என திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது ஹூண்டாய் நிறுவனம் இதனுடன் கூடுதலாக ரூபாய் 6180 கோடியை முதலீடு செய்யப் போவதாக தமிழக அரசுடன் தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழக தொழிற்சாலை துறை செயலாளர் அருண்ராய் என்பவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த தருணத்தில் தொழிற்சாலை துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் உடன் இருந்தார்கள். இந்த புதிய என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்ற தகவலை காணலாம்.
ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுடன் செய்த ஒப்பந்தத்தின்படி ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்துடன் ஹூண்டாய் நிறுவனம் ஒரு ஒப்பந்த உடன்படிக்கையை மேற்கொள்ள உள்ளது. அதன்படி ஹுண்டாய் நிறுவனத்திற்காக ஹைட்ரஜன் எக்கோ சிஸ்டத்தை முழுமையாக லோக்கலைஸ் செய்து தரும் முயற்சியை ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் முன்னெடுக்க உள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் வாகனங்களையும் ஹூண்டாய் நிறுவனம் களம் இறக்க தயாராகி வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் போல ஹைட்ரஜன் வாகனங்களும் மாசு ஏற்படுத்தாத வகை வாகனங்களாகும். இந்த வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும் குறைத்து மிக குறைவான விலையில் பயணம் செய்ய முடியும் என கருதப்படுகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை மிஞ்சும் அளவிற்கு ஹைட்ரஜன் வாகனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது இன்னும் முழுமையான வடிவமைப்பை பெறவில்லை.
ஆங்காங்கே ஒரு சில நிறுவனங்கள் ஹைட்ரஜன் வாகனங்களை தயாரித்து வெளியிட்டு இருந்தாலும் அதன் விலை மற்றும் ஹைட்ரஜன் கிடைக்கும் அளவு என்பது மிக குறைவாக இருக்கிறது. பல்வேறு விதமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் முதலீடு செய்து வருகின்றன. இதற்கு முன்னர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் தூத்துக்குடியில் தனது ஆலையை அமைக்க தமிழகத்தில் ரூ16 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்து தமிழக அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து செய்தது. இதன்படி இந்த நிறுவனம் விரைவில் தூத்துக்குடியில் ஆலையமைத்து பேட்டரி தயாரிப்பு மற்றும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் சுமார் 3000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்து எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து வாகன பிரிவில் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் மிக அதிகமான அளவில் முதலீடுகளை தமிழகத்தில் செய்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உற்பத்தியில் தமிழகம் ஏற்கனவே ஒரு நல்ல இடத்தில் தான் இருக்கிறது. பல முக்கியமான நிறுவனங்கள் தமிழகத்தில் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு சென்று வருகின்றனர். தமிழகம் என்பது இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்யவும் அதே நேரத்தில் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சிறந்த இடமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








