ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிமீ ஓடும்... விற்பனையில் சாதனை படைக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV). இந்த எலெக்ட்ரிக் காரின் (Electric Car), கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 102 கோனா இவி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 40 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் கோனா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் 155 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 23.84 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 24.03 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 39.2 kWh பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 452 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதும் கூட எளிமையான ஒரு விஷயம்தான். 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 57 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

ஆனால் 7.2 kW AC சார்ஜரை பயன்படுத்தினால், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் முழுமையாக நிரம்புவதற்கு 6 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் கோனா இவி எலெக்ட்ரிக் காரின் நேரடி போட்டி மாடல் ஆகும்.
தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.98 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 25.08 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் கார் தவிர, டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரும், ஹூண்டாய் கோனா இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா இவி எலெக்ட்ரிக் கார் தவிர, மற்றொரு எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்து வருகிறது. அது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் விற்பனையும் இந்தியாவில் சிறப்பாகவே உள்ளது.
வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) மிகவும் முக்கியமானது ஆகும். இதன் வருகைக்கு பின்னர், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், ஹூண்டாய் தனி முத்திரை பதிக்கும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








