கிள்ளி கொடுக்காம அள்ளி கொடுத்த ஹூண்டாய்... புதிய கனவு கார் வாங்க சரியான நேரம் வந்தாச்சு!!
தீபாவளி நெருங்கிவிட்டாலே கார்களுக்கு சலுகைகளும், தள்ளுபடிகளும் குவிய ஆரம்பித்துவிடுவோம். ஏனெனில், தீபாவளி போன்ற நல்ல நாளில் தான் புதிய கார்களை வாங்க பெரும்பாலான மக்கள் விரும்புவர். இந்த வரிசையில் தற்போது விலை குறைப்பை அறிவித்துள்ள நிறுவனம், ஹூண்டாய் ஆகும். இந்த முறை ஹூண்டாய் கொஞ்சம் அதிகமாகவே சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த வகையில், எந்தெந்த ஹூண்டாய் கார்கள் சலுகைகளை பெற உள்ளன என்பதையும், அவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்த விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் முடிந்தவரையில் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய விரும்பும் கார் நிறுவனங்களுள் ஒன்று ஹூண்டாய் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்கள் என்று பார்த்தால், வென்யூ மற்றும் எக்ஸ்டரை சொல்லலாம். இந்த இரு கார்களுக்கு தான் சலுகைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஹூண்டாய் வென்யூ கார் அதிகப்பட்சமாக ரூ.70,629 வரையிலான சலுகைகளை பெற்றுள்ளது. அதாவது, வென்யூ காரை வாங்குவோர் அதிகப்பட்சமாக ரூ.70,629 வரையிலான சலுகைகளை பெறலாம். மேலும், இந்த காருக்கான ரூ.21,628 மதிப்பிலான ஆக்ஸஸரீஸ் பேக்கை வெறும் ரூ.5,999இல் வாங்கலாம். வென்யூ காருக்கான ஆக்ஸஸரீ பேக்கில் காருக்குள் பிரீமியம் தரத்தில் டபுள்-லேயரில் தரைப்பாயும், பூட் பகுதிக்கு 3டி-இல் தரைப்பாயும் வழங்கப்படுகிறது.

இவற்றுடன், வென்யூ டார்க் க்ரோம் எடிசன் காரில் மட்டும் கூடுதலாக கதவு பகுதிகளில் மோல்டிங்கும், பின்பக்க டெயில்லைட்களில் க்ரோம் கார்னிஷையும் பெறலாம். ஹூண்டாய் வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.94 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சம் வரையில் உள்ளது. மறுப்பக்கம், ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு ரூ.32,972 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கார் உடனும் ஆக்ஸஸரீ பேக்குகளை வாங்கலாம். எக்ஸ்டர் காருக்கான ரூ.17,971 மதிப்பிலான ஆக்ஸஸரீகளை ரூ.4,999இல் வாங்கலாம். எக்ஸ்டர் காருக்கு ஆக்ஸஸரீகளாக 3டி பூட் மேட், பயணிகளின் கழுத்து பகுதிக்கான குஷின், பொனெட்டின் மீது அழகிற்காக ஸ்கூப்ஸ் மற்றும் பியானோ கருப்பு நிறத்தில் பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை ஹூண்டாய் வழங்குகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.13 லட்சத்தில் இருந்து 10.43 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன. இதற்கிடையில், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் கார்களில் கிரெட்டாவை விட விலைமிக்கதாக, டக்ஸனை விட விலை குறைவான எஸ்யூவி காராக அல்கஸார் விற்பனை செய்யப்படுகிறது.
கிரெட்டாவின் 7-சீட்டர் வெர்சனான அல்கஸாரின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, அந்த காரில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட உள்ளது. 2024 அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை சென்றடைய துவங்கியிருக்கும் நிலையில், பழைய அல்கஸார் காரும் சில ஷோரூம்களில் இப்போதும் விற்பனை கிடைக்கிறது. பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.
மற்றப்படி, என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை வாங்கலாம். விலை குறைவான அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். விலைமிக்க வேரியண்ட்களில் பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸையும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான புதிய அறிமுகங்களுக்கு மத்தியில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது. தீபாவளி மட்டுமின்றி இன்னும் நிறைய பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர உள்ளதால், இந்த சலுகைகள் ஹூண்டாயின் கார்கள் விற்பனை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









