கூகுள் கூட கை கோர்த்த ஹூண்டாய் கார் நிறுவனம்.. ஃபோனை ஏதாச்சும் ஃப்ரீயா தர போறாங்களா!..
தென் கொரியாவைச் சேர்ந்த கார் (Car) உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் குழுமம் (Hyundai Motor Group), தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான கூகுள் (Google) நிறுவனத்துடன் கை கோர்த்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு நிறுவனங்களும் இந்த இணைவின் வாயிலாக என்ன செய்ய போகின்றனர் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கலாம். உங்களுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கூகுள், ஹூண்டாய் நிறுவனத்திற்கு அதன் கார்களுக்கான தொழில்நுட்ப சப்போர்ட்டையே இந்த இணைவின் வாயிலாக வழங்க இருக்கின்றது. இதற்காகவே இருவர்களும் கடந்த வியாழக்கிழமை அன்று கூட்டணியைத் தொடங்கினர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் வாகனங்களுக்கான சாஃப்ட்வேர் மற்றும் அடுத்த தலைமுறை நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கூகுள், ஹூண்டாய்க்கு வழங்க இருக்கின்றது.

கார்களில் காணப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மாறியிருக்கின்றது. இதன் பயன்பாட்டையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஓர் முயற்சியாக ஹூண்டாயும், கூகுளும் தற்போது கை கோர்த்திருக்கின்றன. ஆகையால், வரும் நாட்களில் ஹூண்டாய் கார்களில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்னும் அட்வான்ஸ்டானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக ஹூண்டாய் நிறுவனம், கூகுளின் ஆண்ட்ராய்டு ஆட்டோமோட்டிவ் ஆபரேட்டிங் சிஸ்டம் (Android Automotive Operating System)-ஐ ஏற்றுக் கொள்ள இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் காரில் வழங்கப்படும் ஜியோ லொகேசன் சேவை உள்ளிட்டவை இன்னும் அட்வான்ஸ்டானதாக மாற்றப்படும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களுக்கு பெயர்போனவையாகக் காட்சியளிக்கின்றன. இந்த நிலையை மேலும் மேம்படுத்தும் முயற்சியிலேயே ஹூண்டாய் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் ஹூண்டாய் கார்களின் விற்பனை இன்னும் பலமடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் நிறுவனம் முதலில் அதன் விலை உயர்ந்த கார்களிலேயே கூகுள் உடன் இணைந்து தயார் செய்யும் புதிய மென்பொருளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஹூண்டாயின் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய கார் பிரிவான ஜெனசிஸ்-ஸிலும் இந்த கூட்டணியின் வாயிலாக தயார் செய்யப்படும் தொழில்நுட்பம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், நிறுவனத்தின் வரும் கால எலெக்ட்ரிக் கார் மாடல்களிலும் கூகுளின் அட்வான்ஸ்டு அம்சங்கள் இடம் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எந்த கார் மாடலில் முதலில் அந்த அம்சம் வழங்கப்படும் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹூண்டாய் நிறுவனம் கூகுள் உடன் இணைந்து தன்னுடைய கார்களை இன்னும் அட்வான்ஸ்டானதாக மாற்றும் பணியில் மட்டுமல்ல இன்னும் பல புதுமுக கார்களைக் கொண்டு வரும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றது. அந்தவகையில் சீக்கிரமே இந்தியாவில் கிரெட்டாவை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டு கிரெட்டா இவி வெர்ஷனை அது விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி, மாருதி சுஸுகி இவிஎக்ஸ் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு மிக சிறந்த போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் ஹூண்டாய் நிறுவனம் அதன் புதுமுக மின்சார கார்கள் பலவற்றை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. முதலில் அது கிரெட்டா இவியையே விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








