இது வேலைக்கு ஆகாது... டாடாவின் பொருளை எடுத்து அவனையே போட ரெடியாகும் ஹூண்டாய்!!
அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய சிஎன்ஜி கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏனெனில், சிஎன்ஜி கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பினும், அவற்றிற்கான எரிபொருள் செலவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாட்டிற்காக சிஎன்ஜி கார்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கப்படுகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டான மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்கள் விற்பனையில் சில வருடங்களுக்கு முன்பு இருந்தே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து மாருதி கார்களும் இப்போது சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கின்றன.
மாருதி சுஸுகியை தொடர்ந்து இந்தியாவின் மற்ற முன்னணி கார் நிறுவனங்களாக ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தன. ஆனால், இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சற்று வித்தியாசமாக இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜியில் சிஎன்ஜி பவர்டிரெயினை வழங்கி வருகிறது.

இதன் விளைவாக, டாடா சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட்ஸ்பேஸில் கூடுதலாக இடவசதி கிடைக்கிறது. ஏனெனில், பொதுவாக சிஎன்ஜி கார்களில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியை சிஎன்ஜி சிலிண்டர் ஆக்கிரமிப்பது வழக்கம். ஆனால், அந்த சிலிண்டரை இரண்டாக பிரித்து வழங்குவதன் மூலம் காரின் பூட் ஸ்பேஸ் பகுதியில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது.
இதனை கஸ்டமர்கள் கவனத்தில் கொள்வதினால், இந்தியாவின் 2வது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் அதன் சிஎன்ஜி கார்களுக்காக இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜியை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதத்தில், ஹை-சிஎன்ஜி மற்றும் ஹை-சிஎன்ஜி டியோ என்கிற இரு பெயர்களுக்கான காப்புரிமையை வேண்டி ஹூண்டாய் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தால் கடந்த மே 31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விண்ணப்பம் குறித்த விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த பெயர்கள் ஹூண்டாயின் சிஎன்ஜி கார்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. ஹை-சிஎன்ஜி டியோ என்கிற பெயர் இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜியை கொண்ட ஹூண்டாய் சிஎன்ஜி கார்களுக்கு சூட்டப்படலாம்.
அதேநேரம், வெறுமனே ஹை-சிஎன்ஜி என்கிற பெயருக்கான காப்புரிமை வேண்டியும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், சிங்கிள்-சிலிண்டர் டெக்னாலஜி உடனும் ஹூண்டாய் சிஎன்ஜி கார்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் எக்ஸ்டர், அவ்ரா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஹூண்டாய் சிஎன்ஜி கார்களில், கிராண்ட் ஐ10 நியோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.68 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அவ்ரா சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.31 லட்சத்தில் இருந்து ரூ.9.05 லட்சம் வரையிலும், எக்ஸ்டர் சிஎன்ஜி காரின் விலைகள் ரூ.8.43 லட்சத்தில் இருந்து ரூ.9.16 லட்சம் வரையிலும் உள்ளன. இந்த ஹுண்டாய் சிஎன்ஜி கார்களில் தற்சமயம் சிங்கிள்-சிலிண்டர் டெக்னாலஜி வழங்கப்படுகிறது.
அதாவது, ஒரேயொரு சிஎன்ஜி சிலிண்டர் நன்கு பெரியதாக இந்த கார்களில் வழங்கப்படுகிறது. புதிய இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜி உடன் சேர்த்து ஹூண்டாய் சிஎன்ஜி கார்களில் வேறு புதிய தொழிற்நுட்ப அம்சங்கள் எதாவது வழங்கப்படுமா என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால், புதிய இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜியை மேலும் புதிய கார்களிலும் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய முயற்சிக்கும் என்பது மட்டும் உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் தற்போதைக்கு இரட்டை-சிலிண்டர் டெக்னாலஜி உடன் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆகும். அந்த பாணியை பின்பற்றி ஹூண்டாய் நிறுவனம் கஸ்டமர்களை கவர முயற்சிக்க போகிறது. ஆனால், அதேநேரம், சிங்கிள்-சிலிண்டர் டெக்னாலஜி உடனும் தொடர்ந்து சிஎன்ஜி கார்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பது உண்மையில் அருமையான முடிவாகும்.


Click it and Unblock the Notifications









