லட்சகணக்குல தள்ளுபடி கொடுத்தும் வெறும் 157 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க ஏன் தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்தின் கார் ஒன்றை வெறும் 157 பேர் தான் வாங்கியுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. லட்சக்கணக்கில் தள்ளுபடிகள் அறிவித்தும் குறைவான எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாக என்ன காரணம்? என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தென்கொரியாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் காலடி தடத்தை பதித்து இந்திய மக்கள் விரும்பும் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக தற்போது உள்ளது.

இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற கார்களாக உள்ளன. இதனால் ஒவ்வொரு மாதமும் சிறப்பான கார் விற்பனையை நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனத்தை தான் சொல்லலாம். மாருதி நிறுவனத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
இப்படி இருக்கும் போது ஹூண்டாய் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட விற்பனை அறிக்கையில் ஒரு மிகப்பெரிய ஷாக்கிங் ரிப்போர்ட் நமக்கு கிடைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்திருந்தாலும், அந்நிறுவனத்தின் டுஸான் கார் வெறும் 157 கார்கள் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகியுள்ளன.

ஹூண்டாய் நிறுவனத்திடம் உள்ள கார்களில் தற்போது அதிகமாக விற்பனையாகும் காராக ஹூண்டாய் கிரெட்டா கார் தான் இருக்கிறது. இது இந்தியாவிலேயே சிறப்பாக விற்பனையாகவும் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராகும். 15,276 கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த விற்பனையை ஒப்பிடும்போது 47 சதவீதம் அதிகமாகும்.
அதே நேரத்தில் தான் ஹூண்டாய் டுஸான் கார் பெரும் 157 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது மட்டுமல்ல கடந்த மாதம் இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 4 லட்சம் வரையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இந்த காரின் விற்பனை என்பது மிக குறைவாக தான் வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை என்பது குறைந்து கொண்டே இருக்கிறது.

இந்த ஹூண்டாய் டுஸான் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் இருக்கிறது. பெட்ரோல் வேரியன்டை பொறுத்தவரை 2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 156பிஎச்பி பவரையும் 192என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. டீசல் வேரியன்டை பொறுத்த வரை 2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 186 பிஎச்பி பவரையும் 416 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
ஹூண்டாய் டுஸான் காரை பொருத்தவரை அந்த காரில் 10.25 இன்ச் கொண்ட டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதுபோக பானரோமிக் சன் ரூஃப்,கனெக்டெட் கார் தொழில்நுட்பம், டுயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆகியவை உள்ளன. இந்த காரில் ஹீட்டர் மற்றும் வெண்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன, செல்போன்களை வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆல்வீல் டிஸ்க் பிரேக், அடாஸ் தொழில்நுட்பம் ஆகியவை இந்த காரில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பல்வேறு அம்சங்களில் இருந்தும் இந்த காரை மக்கள் பெரிய அளவில் விரும்பவில்லை. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை. இந்த கார் தற்போது ரூபாய் 29 லட்சம் முதல் ரூபாய் 36 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் டுஸான் காரின் விலை அதிகமாக இருப்பதால் பிரீமியம் செக்மெண்டில் உள்ள மக்கள் மட்டுமே இந்த காரை விரும்பி வாங்க வாய்ப்புகள் உள்ளது. அந்த செக்மெண்டில் உள்ள மக்களுக்கு டுஸான் காரை விட மற்ற நல்ல கார்கள் அதிகம் இருப்பதால் அந்த கார்களையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் விற்பனை என்பது குறைவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









