கம்மியான விலையில் புதுசா ஹூண்டாய் கார் வாங்க சரியான நேரம் வந்தாச்சு!! பவர்ஃபுல் டர்போ என்ஜின் உடன்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் வென்யூ (Venue) சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் புதியதாக எக்ஸ்க்ளூசிவ் டர்போ (Exclusive Turbo) வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹூண்டாய் வென்யூ காரின் விலை உள்பட, இந்த காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
சமீப வாரங்களாக புது, புது வேரியண்ட் கார்களின் அறிமுகத்தை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். மிக சமீபத்தில் கூட, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் புதியதாக டார்க் எடிசனை அறிமுகப்படுத்தியது. அதேபோல், எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் ஹெக்டர் காரில் புதியதாக இரு புரோ வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் அதன் கிரெட்டா காரில் புதிய என் லைன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. கிரெட்டா என்-லைன் காரின் அறிமுகம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் அதன் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான வென்யூவில் புதியதாக எக்ஸ்க்ளூசிவ் டர்போ வேரியண்ட் ஆப்ஷனை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
புதிய வென்யூ எக்ஸ்க்ளூசிவ் டர்போ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இவ்வாறான ஒரு வென்யூ காரை அறிமுகம் செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வென்யூ காரை ஆன்லைன் வாயிலாகவும் அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப் மூலமாகவும் புக் செய்யலாம்.

இந்த புதிய வென்யூ காரின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. வென்யூவின் புதிய எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும். ஐடியல் ஸ்டாப் & கோ (ISG) தொழிற்நுட்ப வசதியை கொண்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். வெளிப்புற அம்சங்களை பொறுத்தவரையில், வென்யூவின் இந்த புதிய வேரியண்ட் 16-இன்ச் சக்கரங்கள், முன்பக்கத்தில் டார்க் க்ரோம் க்ரில், ரூஃப் ரெயில்ஸ், சுறா துடுப்பு வடிவில் ஆண்டென்னா மற்றும் டெயில்கேட்டில் 'எக்ஸ்க்ளூசிவ்' முத்திரையை கொண்டுள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்களாக ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஸ்டோரேஜ் பகுதி உடன் ஆர்ம்ரெஸ்ட், 2-ஸ்டெப்களில் சாய்க்கக்கூடிய இருக்கைகள், அனைத்து இருக்கைகளிலும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்ஸ் உள்ளிட்டவற்றை வென்யூவின் இந்த புதிய வேரியண்ட் பெற்றுள்ளது.
இந்த புதிய எக்ஸ்க்ளூசிவ் டர்போ வேரியண்ட்டின் அறிமுகத்துடன், வென்யூ காரின் எஸ் (ஆப்ஷ்னல்) டர்போ வேரியண்ட்டிலும் சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. வென்யூ எஸ் (ஆப்ஷ்னல்) டர்போ வேரியண்ட்டில் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் டிரைவர் & பயணிக்கான மேப் லேம்ப்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று ஹூண்டாய் வென்யூ ஆகும். அதேநேரம், இந்த ஹூண்டாய் எஸ்யூவி காருக்கு விற்பனையில் போட்டியும் அதிகமாக உள்ளது. இதனால், விற்பனை சரிவை சந்திக்காமல் இருக்க இவ்வாறான புது, புது வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications









