நம்பவே முடியல... மிகவும் குறைவான விலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்... டாடாவுக்கு செக்!
இந்தியாவில் ஹூண்டாய் கார்களுக்கு (Hyundai Cars) என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், ஹூண்டாய் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் ஹூண்டாய் நிறுவனமோ 1 எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது.
அது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும். ஆனால் இது விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV) என்ற எலெக்ட்ரிக் காரையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இதுவும் கூட சற்று விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காராகதான் இருந்தது.

ஆனால் ஹூண்டாய் நிறுவனம் கோனா இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனையை சமீபத்தில் நிறுத்தி விட்டது. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்தும் கூட, கோனா இவி எலெக்ட்ரிக் கார் நீக்கப்பட்டு விட்டது. இதற்கு பதிலாக 'மாஸ் மார்க்கெட்' எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தற்போது விற்பனையில் உள்ள க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் கார், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இத்துடன் நிற்க போவதில்லை. ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) ஆகிய 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனைக்கு வரவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் வெனியூ இவி மற்றும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அவை ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் காரை விட மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த தகவல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் சரியான ஒரு முடிவை எடுத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதுதான் இதற்கான காரணம்.
இதே பாணியில் ஹூண்டாய் நிறுவனமும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தால், அவை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்தான் இந்திய வாடிக்கையாளர்களின் தற்போதைய தேவை!


Click it and Unblock the Notifications








