சன்ரூஃப் உடன் கார் வாங்க பெருசா எல்லாம் செலவு பண்ண தேவையில்லை... ஹூண்டாய்க்கு ரொம்ப பெரிய மனசு
ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று வென்யூ (Venue) ஆகும். இதன் காரணமாகவே, வென்யூ காரை அவ்வப்போது ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில், வென்யூ காரின் எஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் அசத்தலான ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பற்றியும், ஹூண்டாய் வென்யூ காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. ஹூண்டாயின் இந்த நிலைக்கு வென்யூ காரும் மிக முக்கியமான காரணம் என சொன்னால் அது மிகையில்லை. அளவில் சிறியதான சப்-காம்பெக்ட் எஸ்யூவி ரக காராக இருப்பதினாலேயே மக்கள் நிறைய பேர் வென்யூ காரை ஆர்வமாக வாங்குகின்றனர்.

இ, எஸ், எஸ் பிளஸ், எஸ் (ஆப்ஷ்னல்), எக்ஸ்க்யூட்டிவ், எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் ஹூண்டாய் வென்யூ கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், வென்யூ காரில் புதியதாக எஸ் (ஆப்ஷ்னல்)+ (S(O)+) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் முக்கிய அம்சமாக எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதியை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.
எலக்ட்ரிக் சன்ரூஃப் கொண்ட புதிய வென்யூ எஸ் (ஆப்ஷ்னல்)+ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9 லட்சத்து 99,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை கப்பா 1.2 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். அதேபோல், இந்த பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும்.

ஆனால், வென்யூ காரின் மற்ற வேரியண்ட்களில் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மேலும், பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. டீசல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும்.
இந்த டர்போ பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளிட்டவை புதிய வென்யூ எஸ் (ஆப்ஷ்னல்)+ வேரியண்ட்டிற்கு வழங்கப்படவில்லை. தொழிற்நுட்ப அம்சங்களாக, புதிய வென்யூ எஸ் (ஆப்ஷ்னல்)+ வேரியண்ட்டில் ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப், எல்இடி டிஆர்எல், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், காரின் டேஸ்போர்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ ஆப்பிள் கார்ப்ளே உடன் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வண்ண நிறத்தில் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேவை பெறலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ரியர் கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஹூண்டாய் வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.94 லட்சத்தில் இருந்து ரூ.13.48 லட்சம் வரையில் உள்ளன. அபிஸ் கருப்பு, டெனிம் நீலம், டைடன் கிரே, டைபூன் சில்வர், ஃபியரி சிவப்பு மற்றும் அட்லஸ் வெள்ளை என்கிற 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும் வென்யூ காருக்கு விற்பனையில் போட்டியாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சன்ரூஃப் இன்றைய கால கார்களில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான அம்சமாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே, வென்யூ போன்ற சிறிய அளவிலான கார்களில் கூட எலக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விலைமிக்க கார்களில் மட்டுமே சன்ரூஃப் வழங்கப்பட்டுவந்த நிலை மாறி, ரூ.10 லட்சத்தில் விலை கொண்ட காரில் சன்ரூஃப்-ஐ வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








