ரொம்ப நல்ல கார் ஆச்சே! ஆனா யாரும் வாங்க ரெடியா இல்ல! போற போக்க பாத்தா சேல்ஸயே ஸ்டாப் பண்ணீருவாங்கலாட்ட இருக்கு
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மறுபக்கம் செடான் ரக கார்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வம் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், பெரும்பாலான செடான் ரக கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதற்கு ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) காரும் விதிவிலக்கு அல்ல. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் 3,687 வெர்னா செடான் கார்களை விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,381 ஆக குறைந்துள்ளது. இது 63 சதவீத வீழ்ச்சி ஆகும். தற்போது நமக்கு கிடைத்துள்ள ஹூண்டாய் வெர்னா செடான் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெர்னா காரின் ஆரம்ப விலை 11 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.42 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் வெர்னா காரில் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் கிடையாது. டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்றாலும் கூட, 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவது இந்த காரின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது.

அவை 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 160 பிஎஸ் பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினானது, அதிகபட்சமாக 115 பிஎஸ் பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், சன்ரூஃப் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் போன்ற அம்சங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்ளிட்ட வசதிகள் எல்லாம் ஹூண்டாய் வெர்னா செடான் காரில் வழங்கப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி (Honda City), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் வெர்னா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








