சுதந்திரம் வாங்குன புதுசுல வெளிநாட்டுல கார் வாங்கிட்டு இருந்தோம்! இப்ப இந்திய கார்களை அவங்க வாங்குறாங்க
இந்திய ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் தேச வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. தற்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையால் 7.1 சதவீதம் அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 3.5 கோடி நபர்களுக்கு இந்த செக்டார் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டாக இந்தியா மாறி உள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை ஆரம்பத்தில் மிக மெதுவான வளர்ச்சியை தான் பெற்றது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் இறக்குமதி தான் செய்யப்பட்டன. ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் 1942ம் ஆண்டு மோரிஸ் தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க துவங்கியது. அதைத் தொடர்ந்து பிரிமியர், மஹிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் வாகன தயாரிப்புத் துறையில் களமிறங்கின.

சுதந்திரத்திற்கு பிறகு மத்திய அரசு முற்றிலும் இந்தியாவிலேயே வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக முதல் டாரீஃப் கமிஷனை 1952ம் ஆண்டு அமைத்தது. இதன் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, ரூட்டீஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் சூழ்நிலை ஏற்பட்டது.
1980களில் பழைய வாகனங்கள் இந்தியாவில் அதிகமாவது பெரும் பிரச்சனையாக இருந்தது. அப்பொழுது மாருதி உத்தியோக் லிமிடெட் என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் சுஸூகி நிறுவனத்துடன் சேர்ந்து இந்த பிரச்சனைக்கான தீர்வை கண்டுபிடித்தது. இதையடுத்து மாருதி 800 என்ற ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

அதன் பிறகு 1990களில் தாராளமயமாக்கல் கொண்டுவரப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகளை அதிகரிக்க வழி வகுத்தது. இது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்தது. ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாமல் விவசாயம், சேவை துறை, போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த தாராளமயமாக்கல் பல்வேறு விதமான மாற்றங்களை செய்து வளர்ச்சியை கொண்டு வந்தது.
அதன்பிறகு 2022ம் ஆண்டு இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறி உள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு தயாரிக்கப்படுகிறது, 56 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி வருகிறது.. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டப்படுகிறது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் தான் மிக அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் செட்டராக இருக்கிறது. இந்த செக்டாரில் தற்போது 1.3 கோடி மக்கள் நேரடி ஊழியர்களாகவும், 2.2 கோடி மக்கள் மறைமுக பலன்பெறும் நபர்களாகவும் இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்தியா எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் தானியங்கியாக இயங்கும் டிரைவிங் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
இந்திய அரசு "மேக் இன் இந்தியா" திட்டம் ஃபேம் மானியம் ஆகியவை மூலம் ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்து வருகிறது. ஃபேம் மானியம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மிகப்பெரிய அளவில் உதவுகிறது. இதனால் குறைந்த விலையில் மக்களால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிகிறது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி இந்தியாவின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமாக தரமான சாலைகள், தரமான போக்குவரத்து வசதிகள், ஆகியவை இந்தியா பெறுவதற்கு இந்த ஆட்டோமொபைல் துறை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்தியாவின் உட்கட்டமைப்பு வசதியை நிர்ணயிக்கும் விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது 2026ம் ஆண்டு 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு தனது வர்த்தகத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 200 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான முதலீட்டை ஈர்த்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனம் மார்க்கெட் 2022 முதல் 2030ம் ஆண்டுக்குள் 49 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வளர்ந்து வரும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது. முக்கியமாக பசுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிரந்தரமான தொழில்நுட்பங்கள் குறித்த வளர்ச்சி இந்தியாவில் அதிகமாக வளர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications









