இந்தியால எல்லாரும் அம்பானி ஆகிட்டாங்களோ!.. 5கோடி ரூபா, 10கோடி ரூபா காரையெல்லாம் ரொம்ப அசால்டா வாங்குறாங்களாம்!
"இந்தியாவில் எல்லாரும் அம்பானி ஆகிட்டாங்களோ".. என வினவும் அளவிற்கு நாட்டில் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் அம்பானி குடும்பத்தினரே வாரத்துக்கு ஒன்று அல்லது மாசத்துக்கு ஒன்று என விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கிப் போடுபவர்களாக இருக்கின்றனர். இவர்களைப் போலவே இன்னும் பல இந்தியர்கள் நாட்டில் சொகுசு கார்களை விலையைப் பார்க்காமல் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிற தகவலே தற்போது வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் புள்ளி விபரங்கள் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ செழிப்பும் குறிப்பிட்ட ஒரு சில செல்வந்தர்களிடத்திலேயே முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கின்றன. மறுபக்கம் இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. புதிய செல்வந்தர்கள் நாட்டில் உருவாகிக் கொண்டிருப்பதையே இது குறிக்கின்றது.

ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களைபோல லம்போர்கினி, ஃபெராரி மற்றும் அஸ்டன் மார்ட்டின் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் நாட்டில் மிகப் பெரிய தேவை உருவாகி இருப்பதாகவே தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, லம்போர்கினி நிறுவனம், இந்தியாவிற்காக ஒதுக்கி வைத்த அனைத்து கார் மாடல்களும் இப்போது விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
நிறுவனம் இந்தியாவில் ஹூராகேன், உருஸ் மற்றும் ரெவல்டோ ஆகிய கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் விலை ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரே நாட்டில் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றன.
லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமல்ல ஃபெர்ராரி, மெக்லாரன் மற்றும் அஸ்டன் மார்டின் போன்ற நிறுவனங்களும் நல்ல விற்பனை வளர்ச்சியையே இந்தியாவில் பெற்றிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதேபோல், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களும் மிக மிக சிறப்பான விற்பனை வரவேற்பையே நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, இந்தியாவில் ரூ. 2.5 கோடி முதல் ரூ. 4.5 கோடி விலைக் கொண்ட காரைகூட அதிக ஆர்வத்துடன் இந்திய பணக்காரர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், நடப்பாண்டில் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சொகுசு மற்றும் விலை உயரிய கார்களின் விற்பனை மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்ற ஆண்டில் சொகுசு கார்களின் விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்தது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்தும், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் சொகுசு கார்கள் விற்பனை பற்றிய புள்ளி விபரங்களை வைத்தும் நடப்பாண்டில் ஆடம்பர கார் விற்பனை மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என ஆட்டோத்துறை வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.
மேலும், நாட்டில் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் புதிய மற்றும் மிக மிக விலை உயர்ந்த கார்களை நாட்டில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் அதன் ஒன்-77 சூப்பர் காரை தழுவி உருவாக்கப்பட்ட வேண்டேஜ் எனும் கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3.99 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இது கட்டுமஸ்தான மற்றும் அதீத ஆற்றலை வெளியேற்றக் கூடிய கார் மாடலும் ஆகும். இதேபோல், பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஆடம்பர காரையும், ஆடி நிறுவனம் க்யூ3 மற்றும் க்யூ3 ஸ்போர்ட்பேக் கார் மாடலையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு தொடர்ச்சியாக சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தி ஆடம்பர கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இதேபோல், இந்தியாவில் செல்வந்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக நைட் ஃபிராங்கின் சமீபத்திய செல்வச் செழிப்பு அறிக்கை கூறுகின்றது. 2023இல் 13,263ஆக இருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 19,908ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கின்றது. இந்த அதிகரிப்பால் நாட்டில் சொகுசு கார்களுக்கான தேவையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை வளர்ந்து வரும் நாடாகவும், ஏழை நாடாகவும் பார்த்துக் கொண்டிருக்கின்றவேளையிலேயே நாட்டில் பணக்காரர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல், இப்போதும் நாட்டில் பசியால் வாடும் மக்கள்கள் இருக்கதான் செய்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








