தீபாவளிக்கு பட்டாசு வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க!! ஹூண்டாய், மாருதி காருக்கு கஸ்டமர்ஸ் குவியுறாங்க!
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு சமீப காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, அளவில் சிறியதான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து கஸ்டமர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையும் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் எத்தனை காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் காம்பெக்ட் எஸ்யூவி கார் ஆகும். இந்த பிரிவில் தற்போதைக்கு ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார்களே சிறப்பாக விற்பனையாகுகின்றன. குறிப்பாக, ஹூண்டாய் கிரெட்டா கார் கடந்த சில வருடங்களாகவே விற்பனையில் ஜொலித்து வருகிறது.

கடந்த 2024 செப்டம்பர் மாதத்திலும் 15,902 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் இது 3,185 கார்கள் அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 12,717 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 16,762 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் 860 கிரெட்டா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார் 10,267 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 செப்டம்பரில் 11,736 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பினும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 9,021 கிராண்ட் விட்டாரா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் 1,246 கிராண்ட் விட்டாரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் 3வது இடத்தில் கியா செல்டோஸ் 6,959 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 செப்டம்பரில் 10,558 கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவின் முதன்மையான காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக செல்டோஸ் விளங்கியது. இந்த வகையில் பார்த்தால், கடந்த 1 வருடத்தில் செல்டோஸ் கார்களின் விற்பனை 3,599 யூனிட்கள் குறைந்துள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்திலும் 6,536 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தை 5,385 கார்கள் விற்பனை உடன் டொயோட்டா ஹைரைடர் பிடித்துள்ளது. 2023 செப்டம்பரில் வெறும் 3,804 ஹைரைடர் கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட்டில் 6,534 ஹைரைடர் கார்கள் விற்கப்பட்டு இருந்தன.

5வது இடத்தில் டாடா கர்வ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,763 டாடா கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. 2024 ஆகஸ்ட்டில் 3,455 கர்வ் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. 2023 செப்டம்பர் சமயத்தில் டாடா கர்வ் கார்கள் விற்பனையில் இல்லை.
இதற்கடுத்து 6வது, 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் உள்ளன. இவை மூன்றின் விற்பனை எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக முறையே 1960, 1767 மற்றும் 1611 ஆக கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளன. 9வது மற்றும் 10வது இடங்களில் எம்ஜி அஸ்டர் மற்றும் சிட்ரோன் பசால்ட் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் 760 மற்றும் 341 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் என்கிற காம்பெக்ட் எஸ்யூவி காரும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை இன்னும் சிறப்பானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









