மாருதி இல்லைனா டாடா காரை தான் நிறைய பேர் வாங்குகிறார்கள்... உண்மையை போட்டுடைத்த சேல்ஸ் ரிப்போர்ட்!!
ஒரு காலத்தில் செடான் ரக கார்களையும், ஹேட்ச்பேக் ரக கார்களையும் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். ஏனெனில், உயரம் அதிகமாக இருப்பதால் எஸ்யூவி கார்களுக்குள் அதிக இடவசதி கிடைக்கிறது. குறிப்பாக, அளவில் சிறியதான எஸ்யூவி கார்களை மக்கள் நிறைய பேர் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விலை குறைவான கார்களை தான் நம் இந்தியர்கள் அதிகளவில் வாங்குவார்கள் என்பது உலகமறிந்த விஷயம். இதனை வெளிக்காட்டும் வகையில், நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான 10 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் மக்கள் பலர் தேர்வு செய்யும் அளவு என்றால், 3.8 மீட்டர்களில் இருந்து 4 மீட்டர்கள் வரையில் நீளம் கொண்ட எஸ்யூவி கார்களை ஆகும். இவை, சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் எனப்படுகின்றன.

இத்தகைய எஸ்யூவி கார்களையே மக்கள் அதிகமாக வாங்குவதால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் குறைந்தது ஒரு காரையாவது இந்த பிரிவில் விற்பனை செய்கின்றன. இதனால், போட்டி மிகுந்ததாக இந்த எஸ்யூவி கார் பிரிவு விளங்குகிறது. தற்போதைக்கு, இந்தியாவில் மொத்தம் 13 விதமான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 5,499 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 89 ஆயிரம் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 2,235 கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 13 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டது என்றால், அது மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா ஆகும்.

கடந்த மாதத்தில் மொத்தம் 19,190 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 ஆகஸ்ட் மாதத்தில் 14,572 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. 2024 ஜூலை மாதத்திலும் 14,676 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை வாங்கும் 5இல் ஒருவர் நிச்சயமாக பிரெஸ்ஸா காரை தேர்வு செய்வதாக இந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
பிரெஸ்ஸாவுக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக 2வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் பஞ்ச் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 15,643 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 15,643 எண்ணிக்கையில் பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 14,523 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், 2024 ஜூலை மாதத்தில் 16,121 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் மீண்டும் மாருதி & டாடா கார்களாக மாருதி சுஸுகி ஃப்ரான்ஸ் 12,387 யூனிட்கள் விற்பனை உடனும், டாடா நெக்ஸான் 12,289 யூனிட்களின் விற்பனை உடனும் உள்ளன. இதில், டாடா நெக்ஸான் ஆனது 2023 ஆகஸ்ட்டில் வெறும் 8,049 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இவற்றிற்கு அடுத்து 5வது இடத்தில் கியா சொனெட் 10,073 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 9,085 மற்றும் 9,000 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் இருப்பவை ஹூண்டாய் எக்ஸ்டர் (6,632), மஹிந்திரா தார் (4,268) மற்றும் டொயோட்டா டைசர் (3,213) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள அனைத்து சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் விற்பனையும் ஏற்றமும், இறக்கமுமாய் உள்ளது. குறிப்பாக, 2வது இடத்தில் உள்ள டாடா பஞ்ச் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 4 மாதங்களாக அதிகம் விற்பனையாகும் இந்தியாவின் நம்பர் ஒன் காராக டாடா பஞ்ச் விளங்கியது.


Click it and Unblock the Notifications









