மாருதி காரை வாங்குற மாதிரி, இனி ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கலாம்!! பணத்தை சேர்த்து வைக்க ரெடியாகுங்க!
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனம் அதன் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் வெகுவாக குறைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுருக்கமாக ஜே.எல்.ஆர் என அழைக்கப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவரின் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் அதிகளவில் ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதாகவும், புதியதாக ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கும் பாலிவுட் ஸ்டார்களை பற்றியும் அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் செயல்படுகிறது. இருப்பினும், ரேஞ்ச் ரோவர் கார்கள் இங்கிலாந்தில் உள்ள ஜே.எல்.ஆர் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. யுகே-இல் உள்ள ஜே.எல்.ஆர் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸின் உதவியுடன் தான் இயங்குகிறது என்றாலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாததால் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் நம் நாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளன.
இந்த நிலையில், ரேஞ்ச் ரோவர் கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ரேஞ்ச் ரோவர் கார்களின் பாகங்கள் யுகே-இல் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு இங்கு முழு காராக அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விளைவாக, கப்பலில் கொண்டுவரப்படும் போக்குவரத்து செலவு வெகுவாக குறையும்.

அதாவது, முழு காராக இறக்குமதி செய்வதை காட்டிலும், பாகங்களாக இறக்குமதி செய்வதினால் கப்பல் போக்குவரத்துக்கான செலவை குறைப்பது மட்டுமின்றி, வெளிநாட்டு இறக்குமதிக்கு மத்திய அரசாங்கம் விதிக்கும் வரிகளும் கணிசமாக குறையும். இதன் காரணமாக, இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் 18%-இல் இருந்து 22% வரையில் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் ரேஞ்ச் ரோவர் வேலர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் என 4 விதமான லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.67.90 லட்சத்தில் இருந்து ரூ.4.17 கோடி வரையில் உள்ளன. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், இந்த விலைகள் ரூ.10 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.90 லட்சம் வரையில் குறைக்கப்படலாம்.

இந்தியாவில் முதற்கட்டமாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் அசெம்பிள் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் டெலிவிரி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்களின் விலைகள் குறைந்தால், ஆட்டோமேட்டிக்காக விற்பனை அதிகரித்துவிடும்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த 1 வருட காலத்தில் மொத்தம் 4,436 கார்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 81% அதிகமாகும். இந்த 4,436 கார்களில் ரேஞ்ச் ரோவர் கார்கள் மட்டுமின்றி, ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் டிஸ்கவரி மற்றும் டிஃபெண்டர் கார்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிஸ்கவரி, டிஃபெண்டர் என வேறு சில கார்களையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தாலும், ரேஞ்ச் ரோவர் கார்கள் தான் ஜே.எல்.ஆரின் பிரதான தயாரிப்புகளாகும். இதனால்தான், இந்தியாவில் முதற்கட்டமாக ரேஞ்ச் ரோவர் கார்களை அசெம்பிள் செய்ய இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.


Click it and Unblock the Notifications









