ஜாகுவார் பெயருக்கே கஸ்டமர்ஸ் குவியுறாங்க!! சினிமா ஸ்டார்கள் டூ அரசியல்வாதிகள் வரை ரேஞ்ச் ரோவர் டாப் சாய்ஸ்!
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனம் இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் தொடர்ந்து 3வது காலாண்டாக விற்பனையில் புதிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அப்படி எத்தனை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
இந்திய மார்க்கெட்டில், கடந்த 9 மாதங்களில் (2023 ஏப்ரல் - டிசம்பர்) மொத்தம் 3,582 கார்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது, நடப்பு 2023-24 நிதியாண்டில், இதுவரையில் 3,582 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய 2022- 23 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் எண்ணிக்கையை விட சுமார் 93% அதிகம் ஆகும்.

ஏனெனில், 2022 ஏப்ரல் - டிசம்பர் மாதத்தில் 3,582இல் பாதி எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே ஜே.எல்.ஆர் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இந்தியாவில் கடந்த 9 மாதங்களிலும், வழக்கம்போல் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சிறந்த விற்பனை கார்களாக ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் விளங்கியுள்ளன. ஜே.எல்.ஆர் நிறுவனத்தில் கார் வாங்குபவர்களில் 4இல் 3 பேரது தேர்வு ரேஞ்ச் ரோவர் அல்லது டிஃபெண்டர் காராகவே உள்ளது.
2022ஆம் ஆண்டு உடன் ஒப்பிடுகையில், கடந்த 9 மாதங்களில் ரேஞ்ச் ரோவர் கார்களின் விற்பனை ஆனது சுமார் 250 சதவீதமும், டிஃபெண்டர் கார்களின் விற்பனை 150 சதவீதமும் அதிகரித்துள்ளன. கடந்த 3 மாதங்களில் (2023 அக்டோபர் - டிசம்பர்) மட்டும் 1,226 கார்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இது 2022இன் கடைசி 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட ஜே.எல்.ஆர் கார்களின் எண்ணிக்கையை விட 74% அதிகம் ஆகும். கடந்த 3 மாதங்களில் ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் விற்பனையில் 2024மை ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. இந்த வகையில், ரேஞ்ச் ரோவர் வேலர் கார்களின் விற்பனை ஆனது 2022ஆம் ஆண்டை காட்டிலும் 183% அதிகரித்துள்ளது.
கார்கள் விற்பனை மட்டுமின்றி, ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை முன்பதிவு செய்வதும் கடந்த 3 மாதங்களில் சுமார் 92% அதிகரித்துள்ளது. தற்போதுவரையில் கிடைத்துள்ள புக்கிங்குகளுக்கு கார்களை அடுத்த 8 மாதங்களுக்கு டெலிவிரி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக கூறும் ஜே.எல்.ஆர் நிறுவனம், இதன் காரணமாக தங்களது நிறுவனத்தின் கார்களின் விற்பனை வரும் மாதங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதுகுறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா கருத்து தெரிவிக்கையில், "கடந்த 9 மாதங்களில், இந்தியாவில் ஜே.எல்.ஆர்-இன் முன்னேற்றம் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் முந்தைய ஆண்டை காட்டிலும் ஏறக்குறைய 100% எழுச்சியை நிறுவனம் காட்டியுள்ளது.
அதிகரித்து வரும் ஆர்டர்கள் ஒரு வலுவான தேவையை சிக்னல் செய்கின்றன. இது நம்பிக்கைக்குரிய எதிர்கால வாய்ப்புகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் பேட்டரி எலக்ட்ரிக் கார் ஆனது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இடையே கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ அளவுக்கு இல்லையென்றாலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் ஒவ்வொரு மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு விஐபிகள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை அதிகளவில் வாங்குவதாக சமீபத்தில் கூட நமது செய்தித்தளத்தில் கூறியிருந்தோம்.


Click it and Unblock the Notifications









