என்ன பெரிய ரோல்ஸ் ராய்ஸ்-ஸு.. ஜாகுவார் கப்பல் மாதிரியான கார தயாரிச்சுட்டு இருக்கு.. கண்ணுலையே நிக்குற ஸ்டைல்!!
அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) விளங்குகின்றது. இதன் கார்கள் உல்லாச கப்பல்களுக்கே டஃப் கொடுக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இத்தகைய கார்களுக்கே அனைத்திலும் ஈடு கொடுக்கக் கூடிய ஓர் புதுமுக கார் மாடலை ஜாகுவார் (Jaguar) நிறுவனம் சீக்கிரமே விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது தெரிய வந்து உள்ளது. நிறுவனம் டைப் 00 (Type 00) எனும் கான்செப்ட் (Concept Car) மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.
இதுவே முன்னணி சொகுசு கார்கள் பலவற்றிற்கு டஃப் கொடுக்கும் விதமாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஜாகுவாரின் அந்த புதுமுக கார் மாடல் ஆகும். முக்கியமாக இதன் லுக் முன்னணி ஆடம்பர கார் மாடல்கள் பலவற்றிற்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, தனித்துவமான அழகிய தோற்றமே அதற்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முன் பக்கம் (பான்னெட்) மிக நீளமானதாகவும், பின் பக்கம் சற்றே குறுகலானதாகவும் (கூபே ஸ்டைலில்) இருக்கும். இவையே இந்த காருக்கு கூடுதல் தனித்துவமான லுக்கை வழங்கும் விதமாக அமைந்திருக்கின்றன. இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக மெல்லிய இழை போன்ற ஹெட்லைட் டைப் 00 கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதே ஸ்டைலிலான டிஆர்எல் மற்றும் நூல் போன்ற நீளமான ஸ்டாப் லைட் ஆகியவைம் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த ஸ்டாப் லைட் அடிப்பக்கத்தில் ஒன்றும், மேல் பக்கத்தில் ஒன்றும் என இரண்டு தனி தனியாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமாதிரியான இன்னும் பல்வேறு தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாகவே ஜாகுவார் டைப் 00 தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் கான்செப்ட் மாடல் இரண்டு டோர்களை மட்டுமே கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், இது விற்பனைக்கு வரும்போது நான்கு டோர்களைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இது ஓர் மின்சார கார் மாடல் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
உலக அளவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே ஜாகுவார் நிறுவனம் டைப் 00 மாடலை சீக்கிரமே விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த காரின் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு இறுதியிலேயே தொடங்கிவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில், ஜாகுவார் இதுவரை தயாரித்ததிலேயே மிக மிக அழகான கார் மாடலாக அது இருக்கும் என தெரிகின்றது. இதன் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக உருவத்திற்கு சம்பந்தமே இல்லாத பெரிய அளவிலான வீலை ஜாகுவார் பயன்படுத்த இருக்கின்றது.
மேலும், அந்த வீலிற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக, ஜாகுவார் சமீபத்தில் மாற்றிய அதன் புதிய சின்னத்தை (Logo) பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தனது பாரம்பரியமிக்க சின்னத்தை சில தினங்களுக்கு முன்னரே ஜாகுவார் மாற்றியது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த சின்னம் வீலில் மட்டுமின்றி, கிரில் மற்றும் காரின் உட்பக்கத்திலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உள்பக்கமும் கவரக் கூடியதாகவே இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜாகுவார் டைப் 00-வின் உட்பக்க படங்களையும் வெளியிட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை ஓர் முழு சார்ஜில் 770 கிமீ ரேஞ்ச் தரக் கூடியதாகவும் ஜாகுவார் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆகையால், அழகில், சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதில் மற்றும் ரேஞ்ச் தருவதில் என அனைத்திலும் ஜாகுவார் டைப் 00 மிக சிறந்த எலெக்ட்ரிக் காராக இருக்கப் போவது இப்போதே உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









