சீனாவில் இந்திய கொடியை பறக்க விடபோகுது நம்ம டாடா.. டெஸ்லா, பிஒய்டி நிறுவனங்கள் இப்பவே கதற ஆரம்பிச்சிருக்கும்!
இந்தியாவை போன்று வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக சீனா உள்ளது. தற்போது சீனாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சீன சந்தையின் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் முன்னணி நிறுவனங்களாக பிஒய்டி (BYD), டெஸ்லா (Tesla) உள்ளிட்டவை மாறியிருக்கின்றன. இதுதவிர இன்னும் பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் சீன சந்தையின் எலெக்ட்ரிக் கார் தாகத்தை தீர்க்கும் விதமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, நம்முடைய டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களுக்கு சவால்விடும் விதமாக அதன் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெக்ஸான்.இவி (Nexon.EV)-யையோ, பஞ்ச்.இவி (Punch.EV)-யையே அது அந்நாட்டில் களமிறக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக தன்னுடைய சொகுசு கார் உற்பத்தி அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) வாயிலாக இந்த வேலையை டாடா மோட்டார்ஸ் பார்க்க இருக்கின்றது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது சீனா சந்தையைக் களம் காண இருக்கின்றது இங்கே கவனிக்கத்தகுந்தது.

ஃப்ரீலேண்டர் (Free Lander)-ஐயே அது களமிறக்க இருக்கின்றது. இது மின்சார வெர்ஷனிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதை முன்னிட்டே அது ஃப்ரீலேண்டரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது.
சீன சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த ஜாகுவார் லேண்ட் ரோவர் அந்நாட்டைச் சேர்ந்த செரி (Chery)இன் ஒத்துழைப்பை நாடி இருக்கின்றது. இவர்களுடனான கூட்டணியின் வாயிலாகவே எலெக்ட்ரிக் கார்களை அது விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது. 12 ஆண்டு கால கூட்டாண்மைக்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையொப்பம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செரி, சீனாவில் வலுவான இருப்பிடத்தைக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் ஃப்ரீலேண்டர் எலெக்ட்ரிக் காரின் உற்பத்திக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பை வழங்க இருக்கின்றது. மேலும், ஜாகுவாரும் அதன் பங்காக வடிவமைப்பு மற்றும் பிராண்டை மேம்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தும் என கூறப்படுகின்றது.
செரியின் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பை பயன்படுத்தியே ஃப்ரீலேண்டர் பெயரில் எலெக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு சீனர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, பிஒய்டி மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இது மிகப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃப்ரீலேண்டர், ஏற்கனவே இந்த உலகிற்கு பரீட்சையமான ஓர் பெயர் ஆகும். 1997 முதல் 2015 வரை இந்த பெயரில் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. இதன் மறுவருகையே மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. முதல் கட்டமாக சீனாவை மட்டுமே முக்கிய சந்தையாக ஃப்ரீலேண்டர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன.
இதற்கு பின்னரே உலக அளவில் இந்த கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான திட்டங்கள் போடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போதே, அது இந்தியாவிற்கு வருமா என்பதும் தெரிய வரும். சீனாவில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் மிகப் பெரிய (கடுமையான) போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான அணல் பறக்கும் சூழலிலேயே தன்னுடைய கால் தடத்தை பதிப்பதற்கான வேலைகளை தொடங்கி இருக்கின்றது, ஜாகுவார் லேண்ட் ரோவர். இது செரி நிறுவனத்தின் வளங்களை, கருவிகளை மற்றும் விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்தி சந்தையைத் தன் வசம் ஈர்க்க திட்டமிட்டு இருப்பது சரியான திட்டமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.
இதன் மின்சார வாகனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் என்ன மாதிரியான பேட்டரி பேக் திறன் கொண்டதாக தயார் செய்யப்படும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவலை எதிர்நோக்கி சீன வாகன ஆர்வலர்கள் பலர் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர், நிதியாண்டு 2026-க்குள் 10 சதவீத இபிஐடி (EBIT) மார்ஜினை கவர்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. எனவே கட்டாயம் சீன சந்தையில் மிகப் பெரிய வெற்றியாளராக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சீன நிறுவனங்களுக்கு அது பெருத்த சவாலையும் விடும் என்று யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








