டவுன்பேமென்ட் ஒரு ரூபாய் கூட வேண்டாம்.. இவ்ளோ அழகான கார்கள வீட்டுக்கு ஓட்டி போக ஒரு பைசாகூட முன்தொகை வேண்டாமா!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம், இந்திய மார்க்கெட்டை மொத்தமாக வளைத்து போட வேண்டும் என்கிற பிளானில் இருப்பது அதன் செயல்பாடுகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புது புது திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில், முன்னதாக தன்னுடைய மின்சார வாகனம் (EV)-களுக்கு என ஓர் பிரத்யேக திட்டத்தை அது சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery As A Service) எனும் பிளானையே அது அறிவித்தது.
இந்த நிலையிலேயே தற்போது பூஜ்ஜியம் டவுன்பேமென்ட் (Zero Down Payment Scheme) எனும் திட்டத்தையும் அது நாட்டில் தொடங்கி வைத்து உள்ளது. இந்த திட்டம் அதன் ஐசிஇ வாகனங்களுக்கு ஆனது ஆகும். ஆனால், அஸ்டர் (Astor) மற்றும் ஹெக்டர் (Hector) ஆகிய கார் மாடல்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், வாடிக்கையாளர்கள் இந்த இரண்டில் ஏதேனும் ஓர் கார் மாடலை ஒரு ரூபாய்கூட முன்தொகைச் செலுத்தாமல் வீட்டுக்கு ஓட்டிச் செல்ல முடியும். ஆனால், இதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் சரியாக இருத்தல் வேண்டும். மேலும், இந்த சலுகை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
100 சதவீதம் ஆன்ரோடு விலைக்கான கடன் உதவியையே வழங்க எம்ஜி நிறுவனம் முன் வந்திருக்கின்றது. இது மட்டுமல்ல இன்னும் பலவற்றிற்கும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அஸ்டர் மற்றும் ஹெக்டர் இரண்டு கார்களையும் வாடிக்கையாளர்கள் மிகவும் சுலபமாக நுகரும் பொருட்டே இந்த சலுகையை எம்ஜி அறிவித்திருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த இரண்டு கார் மாடல்களும் பிரபலமானவை ஆகும். இந்தியாவில் நல்ல வரவேற்பு இந்த கார் மாடல்களுக்கு கிடைத்து வருகின்றது. குறிப்பாக, இரண்டும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஏழு ஆண்டுகள் வரையில் கடன் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, ஆக்சஸரீஸ்களுக்காக அது ரூ. 50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.
ஆகையால் கார்களுக்கு மட்டுமல்ல காரின் அணிகலன்களுக்கு கடன் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல, கூட்டப்பட்ட வாரண்டி மற்றும் பராமரிப்பு பேக்கேஜ்களையும் வாடிக்கையாளர்களால் கடன் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஆண்டு இறுதியை முன்னிட்டே இந்த சிறப்பு சலுகையை எம்ஜி மோட்டார் அறிவித்து இருக்கின்றது.

இதன் வாயிலாகக் கூடுதல் வாடிக்கையாளர்களைக் கவரும் என அது நம்புகின்றது. ஆண்டு இறுதியை விற்பனை வளர்ச்சி உடன் நிறைவு செய்ய வேண்டும் என்கிற நோக்கில் வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே எம்ஜியும் இந்த கடன் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.
ஏற்கனவே இந்த நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் வளைத்துப் போட்டு இருக்கின்றது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக எம்ஜி உருவெடுத்து இருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா மோட்டாராஸ் அலங்கரித்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இடத்தையே அது டாடாவிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஐசிஇ கார் மார்க்கெட்டையும் வளைத்துப் போடும் பணியில் எம்ஜி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இந்தியாவில் அஸ்டர் எஸ்யூவி ரூ. 9.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இதன் அதிகபட்ச விலை ரூ. 18.34 லட்சம் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஹெக்டர் இந்தியாவில் ரூ. 13.99 லட்சம் தொடங்கி ரூ. 22.56 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், வரும் நாட்களில் நிறுவனத்தின் ஐசிஇ கார்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அஸ்டர் மற்றும் ஹெக்டர் கார்களுக்கு இந்த புதிய திட்டத்தால் சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை அறிய சற்றே காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









