இந்திய நிறுவனத்துடன் கை கோர்த்த உற்சாகம்.. சீன நிறுவனம் கார்களையா காட்சிப்படுத்தி தள்ளிகிட்டு இருக்கு!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India Pvt Ltd) நிறுவனம் மேலும் சில கார் மாடல்களை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. சமீபத்திலேயே இந்திய நிறுவனமான ஜேஸ்டபிள்யூ-வும், சீன நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி மோட்டார் இந்தியா-வும் கூட்டணியைத் தொடங்கின. அன்றைய தினம் சைபர்ஸ்டர் எனும் ஸ்போர்ட்ஸ் வகை எலெக்ட்ரிக் கார் மாடலை அவை காட்சிப்படுத்தின.
இந்த கார் மாடலுடன் சேர்த்து இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்தி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை என்ன? அந்த கார் மாடல்களின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய முழு விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி 4 மற்றும் எம்ஜி 5 எனும் எலெக்ட்ரிக் கார் மாடல்களையே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் நாட்டில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதில் எம்ஜி 4 என்பது ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். எம்ஜி 5 என்பது எஸ்டேட் வகை கார் மாடல் ஆகும்.
எஸ்டேட் வகை கார்கள் நீளமான உடல், பின் பக்கத்தில் கதவு மற்றும் பின் பக்க இருக்கைக்கு பின்னால் அதிக இட வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதுதவிர, இதன் பிக்கமும் பார்க் வித்தியாசமாக இருக்கும். இத்தகைய இரண்டு விதமான கார் மாடல்களையே எம்ஜி இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

எம்ஜி4: ஸ்போர்ட்ஸ் கார்களின் டிஎன்ஏ-வைக் கொண்டே இந்த காரை எம்ஜி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. ஸ்போர்ட்டியான தோற்றம், மிக சிறந்த ஏரோடைனமிக் டிசைன் ஆகியவற்றையே இந்த கார் கொண்டிருக்கின்றது. ஆகையால், சாலையில் இந்த கார் தோன்றும்போது மிக சிறப்பான மற்றும் மிகவும் கவர்ச்சியான கார் மாடலாக தென்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலக சந்தைகள் சிலவற்றில் இந்த கார் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ட்ரிம்களில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் உயர்நிலை தேர்வே அதிக சிறப்பம்சங்களையும், அதிக ரேஞஜ் தரக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 77 kWh பேட்டரி பேக்கே இதில் வழங்கப்படுகின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 520 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 245 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் வெறும் 6.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரை வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்தை எட்ட 10.3 மணி நேரத்தையும், இத சதவிகித சார்ஜிங்கை அதிக வேக சார்ஜிங் கருவியைக் கொண்டு சார்ஜ் செய்யும் போது 40 நிமிடங்களுக்கும் உள்ளாகவே சார்ஜாகிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி5: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி எஸ்டேட் வகை கார் மாடல் ஒன்றுகூட விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. முக்கோண வடிவத்திலான பனி மின் விளக்கு, கிளாசிக் லுக்கிலான பான்னெட், சாய்வான பின் பக்க ரூஃப், வேலை செய்யக் கூடிய ரூஃப் ரெயில்கள் மற்றும் பெரிய அலாய் வீல்களால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரும் பலதரப்பட்ட வேரியண்டுகளாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் மாடல் ஓர் முழு சார்ஜில் 378 கிமீ - 402 கிமீ ரேஞ்ஜை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டு கார் மாடல்களிலும் அடாஸ், ஐ-ஸ்மார்ட் செயலி உள்ளிட்ட வசதிகளையும் இது தனக்குள் தாங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அதன் ஆதிக்கத்தை நிலை நாட்டும் விதமாக, ஜேஎஸ்டபிள்யூ உடன் சமீபத்திலேயே கை கோர்த்தது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஓர் கார் என தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களை அடுத்த சில வருடங்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில் தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் அடுத்தடுத்து என இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









