அதிரடி அறிவிப்பு வெளியாக போது.. கார்களின் சாலை வரியை ரத்து செய்ய போறாங்க.. எந்தெந்த கார் மாடலுக்கு பொருந்தும்?
சில மாதங்களுக்கு முன்னர் உபி மாநில அரசாங்கம் ஹிபிரிட் கார் (Hybrid Car)-களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு அந்த அம்சம் கொண்ட கார்களுக்கான சாலை வரியை ரத்து செய்தது. இதன் விளைவாக ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களின் விலை மிகப் பெரிய அளவில் குறைந்தது. எனவே, பலருக்கு எட்டாக் கனியாக இருந்த ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்கள், உபி மாநில அரசின் நடவடிக்கையால் பலரால் நுகர கூடிய ஒன்றாக அவை மாறின. இதே மாதிரியான ஓர் நடவடிக்கையையே தற்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகா எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா அரசு, ஹைபிரிட் கார்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், இது முழுமையாக ரத்து செய்யப்படுமா? அல்லது பகுதியாக, அதாவது, குறிப்பிட்ட சதவீதம் மட்டும் ரத்து செய்யப்படுமா? என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும் கர்நாடகா அரசாங்கம் ரூ. 25 லட்சத்திற்கும் கீழான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஹைபிரிட் கார்களின் விலையையே குறைக்க திட்டமிட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த திட்டம் இப்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
கர்நாடகா அரசாங்கம் ஹிபிரிட் கார்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களை முழுமையாக ரத்து செய்யும் எனில் பல கார் மாடல்களின் விலை மிகப் பெரிய அளவில் குறையக் கூடும். குறிப்பாக, ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல்களான மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா ஹைரைடர் (Toyota HyRyder) மற்றும் ஹோண்டா சிட்டி இஎச்இவி (Honda City eHEV) போன்ற கார் மாடல்களின் விலையே மிகப் பெரிய அளவில் குறைய நேரிடும்.
அதேவேளையில், கர்நாடகா அரசின் இந்த சாலை வரி ரத்து மற்றும் பதிவு கட்டணம் ரத்து திட்டமானது ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்ங்களைக் கொண்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova HyCross), மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Invicto) மற்றும் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) போன்ற கார் மாடல்களுக்கு பொருந்தாது என தெரிகின்றது.
ஏனெனில், ரூ. 25 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும் ஹைபிரிட் கார்களின் விலையையே அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது. எனவே அரசின் முக்கிய நோக்கம் நடுநிலை விலையைக் கொண்ட ஹைபிரிட் கார்களின் விற்பனையை ஊக்குவிப்பது மட்டுமே என தெரிகின்றது. மேலும், கர்நாடகா அரசு இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் எனில் ரூ. 3.5 லட்சம் தொடங்கி ரூ. 4 லட்சம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று மாசுப்பாடு மற்றும் சுற்றுச் சூழலின் நலனைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கு மட்டுமே விலை குறைப்பிற்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே தற்போது ஹைபிரிட் கார்களின் விலையைக் குறைப்பதற்கான வேலைகளையும் அரசுகள் சில மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றன. எனவே, வரும் நாட்களில் மின்சார கார்களைக் காட்டிலும் இவற்றின் விற்பனை மிகப் பெரிய அளவில் வளர்ச்சிக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவை குறைவான எரிபொருள் பயன்பாட்டில் அதிகம் மைலேஜ் தரும். மேலும், குறைவான கார்பனையே அது வெளியேற்றும். இதன் காரணத்தினாலேயே பலரின் பிரியமான கார் மாடலாக மாற தொடங்கி இருக்கின்றது ஹைபிரிட் அம்சம் கொண்ட வாகனங்கள். இதன் விற்பனையை ஊக்குவிக்கும் பணியில் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன மாநில அரசாங்கங்கள்.


Click it and Unblock the Notifications








