காரோட பெயரை சொன்னதுக்காக ஆசிரியருக்கு இலவசமாக காரை வழங்குவதாக அறிவித்த ஸ்கோடா.. ஜாக்பாட் அடிச்சிருக்கு!
கேரளாவைச் சேர்ந்த ஆசிரயருக்கு அடித்த ஜாக்பாட் என்னனு தெரிஞ்சா எல்லாரும் ஆச்சரியத்துல மூழ்கிருவீங்க. காரோட பெயரைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு காரையே பரிசாக வழங்க இருப்பதாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda) அறிவித்திருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் பெயரை ஆரம்பத்தில் ஸ்கோடா நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த நிலையிலேயே இந்த காருக்கான பெயரைக் கண்டுபிடிக்குமாறு ஓர் போட்டியை நாட்டில் தொடங்கி வைத்தது, ஸ்கோடா நிறுவனம்.
மேலும், அதன் பெயரை சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுமுக காரின் பெயரின் ஆரம்பம் மற்றும் முடிவெழுத்துக்களையும் அது அறிவித்தது. இதன் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் 'K' தொடங்கி 'Q' -வில் முடியும் அந்த காரின் பெயரை யூகித்து நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்தவகையிலேயே, கேரளாவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் சரியான பெயரை கூறி அந்த போட்டியில் வென்றிருக்கின்றார். அவர் கைலாக் (Kylaq) என்கிற பெயரையே ஸ்கோடா அதன் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு சூட்டப்பட இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையிலேயே அவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
காசர்கோட்-இல் உள்ள நஜாத் குர்ஆன் அகாடமியின் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹாஃபில் முஹம்மது ஜியாத் மர்ஜானி அல் யமானி. இவரே ஸ்கோடா எஸ்யூவி காரை வென்றவர் ஆவார். இந்த போட்டியில் இவரை போலவே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்களில் ஒருவராகவே ஜியாத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார். தான் வென்றதை, ஆரம்பத்தில் அது வெறும் நகைச்சுவையாகவே இருக்கும் என அவர் நினைத்திருக்கின்றார். பின்னரே அது உண்மை என்பது தெரிய வந்ததும் மகிழ்ச்சியின் உச்சிக்கே அவர் சென்றிருக்கின்றார். ஸ்கோடா நிறுவனம் "நேம் யுவர் ஸ்கோடா" என்கிற பெயரிலேயே இந்த போட்டியை நாட்டில் தொடங்கி வைத்தது.
இந்த போட்டியில் பங்கேற்று சரியான பெயரை சொல்பவர்களுக்கு கார் மட்டுமல்ல சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், பத்து பேர் வெளியூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். ஆனால், அவர்களைக் காட்டிலும் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலியாக காரை வென்றிருப்பவர் காட்சியளிக்கின்றார்.
ஸ்கோடா நிறுவனம் கைலாக் எஸ்யூவி காரை 2025 இல் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. நிறுவனத்தின் இப்போது விற்பனையில் இருக்கும் மற்ற கார் மாடல்களைப் போல அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கியதாகவே இதுவும் இருக்குமாம். ஆனால், இந்த கார் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஸ்கோடா நிறுவனம் தன்னுடைய 2.0 திட்டத்தின் கீழ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் மூன்றாவது கார் மாடல் இதுவாகும். இந்த வாகனத்தின் உற்பத்தியில் 75 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகின்றது. மேலும், எம்க்யூபி ஏ0 ஐஎன் என்ற பிளாட்ஃபார்மில் வைத்தே இந்த காரை ஸ்கோடா உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நாட்டின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றான டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி பிரஸ்ஸா, ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு அது போட்டியாக அமையும். ஏற்கனவே சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே கூடுதலாக களத்தை அனல் பறக்கச் செய்யும் விதமாக ஸ்கோடா கைலாக் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு ஸ்கோடா கார் பிரியர்கள் மத்தியிலும், எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடாவின் தயாரிப்புகளுக்கு பிரீமியம் கார் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே ஸ்கோடா நிறுவனம் புதிய கைலாக் காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காருக்கும் மிக சிறப்பான டிமாண்ட் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








