விற்பனையில் ஜொலிக்கும் குடும்பத்தோட போற மாதிரியான கார்! சேல்ஸ்ல பென்சில், பேனாவையே விஞ்சிரும்போல இந்த காரு!
இந்தியாவில் கொரிய நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தைக் கூறலாம். இந்த நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு இந்தியர்கள் ஏகபோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல மற்றுமொரு தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியாவிற்கும் இந்தியர்கள் மிக சிறப்பான வரவேற்பையே வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே, மாருதி சுஸுகி, டாடா, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா போன்ற முன்னணி கார் உற்பத்தியாளர்களின் வரிசையில் கியாவும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
அந்த அளவிற்கு இந்தியர்கள் மனம் கவர்ந்த நிறுவனமாக கியா மாறி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனத்தின் ஓர் தயாரிப்பு விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா இந்தியாவின் எஸ்யூவி கார் மார்க்கெட்டை அலங்கரிக்கும் விதமாக செல்டோஸ், சொனெட் ஆகிய கார் மாடல்களையும், எம்பிவி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக கேரன்ஸ் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. முன்னதாக இதன் எம்பிவி கார் பிரிவில் லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார்னிவல்-ம் விற்பனைக்கு வழங்கப்பட்டது வந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் மாடல்களில் கேரன்ஸே தற்போது விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அது 1.5 யூனிட்டுகள் வரை விற்பனையாகி உள்ளது. இந்த காரை கியா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதாவது கேரன்ஸ் விற்பனைக்கு வந்து 27 மாதங்களே ஆகின்றன.
அதற்குள்ளாக அது 1.5 லட்சம் யூனிட் விற்பனையை எட்டி இருக்கின்றது. இந்த தகவலை கேரன்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் உள்ள எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய முன்னணி எம்பிவி ரக கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதே கேரன்ஸ் ஆகும்.
இந்த போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை கேரன்ஸ் வழங்கிக் கொண்டிருப்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. கேரன்ஸ் கார் மாடலின் ஒட்டுமொத்த விற்பனையில் 57 பெட்ரோல் ஆப்ஷனுக்கும், 43 சதவீதம் டீசல் ஆப்ஷனுக்கும் கிடைத்திருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் கேரன்ஸில் பலர் பெட்ரோல் மோட்டார் தேர்வையே வாங்க விரும்புகின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கே இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு மிகுந்து காணப்படுகின்றது. சுமார் 62 சதவீதம் பேர் மேனுவலையே வாங்கி இருக்கின்றனர். இதுதவிர இந்த கார் மாடலில் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. முன்னதாக 6 சீட்டர் வெர்ஷன் விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அது மீண்டும் இணைக்கப்பட்டது.
தேவை இருக்கின்ற காரணத்தினால் அதன் மறு அறிமுகம் செய்யப்பட்டது. கியா கேரன்ஸ் எம்பிவி ரூ. 10.51 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 19.21 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், ஒட்டுமொத்தமாக 6 விதமான ட்ரிம்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரீமியம், பிரீமியம் ஓ, பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் பிளஸ், பிரெஸ்டீஜ் (ஓ), லக்சூரி, லக்சூரி (ஓ), லக்சூரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன் ஆகியவையே அவை ஆகும். இதில் எக்ஸ்-லைன் தேர்வில் மட்டுமே 6 சீட்டர் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
மற்ற அனைத்தும் 7 இருக்கைகள் கொண்டவை ஆகும். எஞ்சினை பொருத்த வரை மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை, 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகும். முக்கிய சிறப்பம்சமாக இந்த கார் மாடலில் 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது.
8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் மின் விளக்கு, ஓடிஏ மேப், கார் இணைப்பு அம்சம், ஏர் ப்யூரிஃபையர், காற்றோட்டத்தை உறுதி செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்), மூன்றாவது வரிசை இருக்கையாளர்களக்கு என தனி ஏசி வெண்ட்டுகள், மிருதுவான மற்றும் சௌகரியமான இருக்கைகள், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் உள்ளிட்டவையும் இந்த கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே கேரன்ஸ் எம்பிவியின் விற்பனை அமைந்துள்ளது. இந்த கார் எம்பிவி ரக காராக இருந்தாலும், அதன் லுக் ஓர் எஸ்யூவி காரை போல தெரிகின்றது. இத்தகைய தனித்துவமான ஸ்டலைக் கொண்டிருப்பதாலும் இது இந்தியர்களை அதிக அளவில் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








