ஒரே நடைல எல்லாரையும் ஏத்தீட்டு போலாம்! தனி தனியா ட்ரிப் அடிக்க அவசியமே இல்ல! மாடு மாதிரி ஆயுசுக்கும் உழைக்கும்
இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இந்த நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறப்பான வளர்ச்சியை கியா பதிவு செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 20,022 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23,523 ஆக உயர்ந்துள்ளது.
இது 17 சதவீத வளர்ச்சி ஆகும். கியா நிறுவனத்தின் இந்த சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), அந்நிறுவனம் இந்திய சந்தையில் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது? என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கியா நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு 3 கார்கள்தான் முக்கிய பங்காற்றியுள்ளன.

அவை கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகியவை ஆகும். இதில், முதல் 2 கார்களும் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவை. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் கார், எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது.
நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கியா கேரன்ஸ் கார், 6,217 என்ற சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இது அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கியா கேரன்ஸ் கார் கிடைத்து கொண்டுள்ளது.

கியா கேரன்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 115 பிஎஸ் பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது.
இதுதவிர 160 பிஎஸ் பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இவற்றுடன், 116 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்டி உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.
கியா கேரன்ஸ் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், சிங்கிள் பேன் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 10.1 இன்ச் ரியர் சீட் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர ட்யூயல் 10.25 இன்ச் திரைகளும், கியா கேரன்ஸ் காரில் இடம்பெற்றுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். பாதுகாப்பிற்கு 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.
கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை 10.52 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) ஆகிய கார்களுக்கு எல்லாம், கியா கேரன்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








